Yesterday you cannot respond by anyone in neet exam question

தந்தையை பிணவறையிலும் மகனை தேர்வு அறையிலும் வைத்திருந்த கொடுமை அரங்கேறியது. நேற்று நடந்த நீட் தேர்வில் யாராலும் பதிலளிக்க முடியாத ஒரே கேள்வி... அப்பா எங்கே? என்று இருந்தது.

தந்தை இறந்தது தெரியாமல் தேர்வெழுதிய மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், தேர்வு முடிந்தபிறகு தகவல் தெரிந்து மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருந்த தந்தை கிருஷ்ணசாமியின் உடலைக் கண்டு கதறி அழுதார்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, நூலகராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு நீட் தேர்வு எழுத தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த கேரள மாநிலம் எர்ணாகுளம் நாளந்தா பப்ளிக் பள்ளிக்கு நேற்று முன்தினம் எர்ணாகுளம் சென்ற கிருஷ்ணசாமியும், கஸ்தூரி மகாலிங்கமும் அங்குள்ள ஏர்லைன்ஸ் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

கஸ்தூரி மகாலிங்கம் நேற்று காலை நீட் தேர்வு எழுதச் சென்ற நிலையில், விடுதி அறையில் கிருஷ்ணசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிர் பிரிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாகிய நிலையில், தந்தை மரணமடைந்தது தெரியாமல் மாணவர் தேர்வெழுதியது அப்பகுதியில் இருந்த தமிழக பெற்றோரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

தேர்வு முடிந்த நிலையில் மையத்தின் வாயிலில் செய்தியாளர்கள் அதிகமாகக் கூடியிருந்ததால் மாணவர்கள் அனைவரும் அரை மணி நேரம் தாமதமாகவே வெளியே அனுப்பப்பட்டனர். மகாலிங்கத்தை கேரள காவல்துறையினர் தங்களது வாகனத்தில் ஏற்றி கிருஷ்ணசாமி உடல் வைக்கப்பட்டிருந்த சிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக தந்தை இறந்த தகவல் மகாலிங்கத்திடம் சொல்லப்படவில்லை. அவரை அழைத்துச் செல்லும்போது வாசலில் ஊடகங்கள் புகைப்படம் எடுக்கக் குவிந்ததால் அவர்களை மிரட்சியுடன் பார்த்துச் சென்றார். வாகனத்தில் இருந்த காவல் துறை அதிகாரிகளிடம் அப்பா எங்கே? என்று மகாலிங்கம் கேட்டுள்ளார். ஆனால் அவர்களால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. அப்பாவுக்கு இரத்த கொதிப்பு அதிகமாகிவிட்டதாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து சற்று தாமதமாகவே தந்தை இறந்த செய்தி அவருக்குச் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலைக் கண்ட மாணவர் கதறி அழுதார். திருப்பூரிலிருந்து எர்ணாகுளம் விரைந்து வந்த உறவினர் அன்பரசனிடம் உடற்கூறு ஆய்வு செய்யப்படாமல் கிருஷ்ணசாமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. 

தந்தையை பிணவறையிலும் மகனை தேர்வு அறையிலும் வைத்திருந்த கொடுமை அரங்கேறியது. நேற்று நடந்த நீட் தேர்வில் மட்டுமல்ல மத்திய மாநில அரசும் பதில் சொல்லமுடியாத ஒரே கேள்வி அப்பா எங்கே?