கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, பாஜக  ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சராக  எடியூரப்பா கடந்த மாதம் பதவி ஏற்றார். 

அதன்பிறகு கடந்த 20-ந் தேதி கர்நாடக அமைச்சரவை  விரிவாக்கம் செய்யப்பட்டது. 17 பேர் அமைச்சர்களாக  பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. யாருமே எதிர்பார்க்காத நிலையில் 3 துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்த் கார்ஜோள், புதுமுகங்கள் லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண் ஆகியோருக்கு துணை முதலமைச்சர்  பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முக்கியமான துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மூத்த அமைச்சர்கள் ஆர்.அசோக், ஜெகதீஷ் ஷெட்டர், சி.டி.ரவி, ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கடும் அதிருப்தி அடைந்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

முதலமைச்சராக  பணியாற்றிய தனக்கு தற்போது துணை முதலமைச்சர் பதவி கூட வழங்கவில்லை என்று ஜெகதீஷ் ஷெட்டர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். முன்னாள் துணை முதலமைச்சர்கள்  ஆர்.அசோக், ஈசுவரப்பா ஆகியோர் தங்களுக்கு மீண்டும் துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டது. கூட்டணி அரசு கவிழ்ந்ததில் ஆர்.அசோக்கின் பங்கு முக்கியமானது.

ஆர்.அசோக் தனது அதிருப்தி குறித்து யாரிடமும் பேசாமல் வீட்டில் மவுனமாக இருந்தார். நேற்று பாஜக புதிய தலைவர் பதவி ஏற்பு விழாவுக்கு ஆர்.அசோக்கை முதலமைச்சர் எடியூரப்பா அவரது வீட்டுக்கு சென்று சமாதானப்படுத்தி தனது காரில் அழைத்து வந்தார்.

இன்னொரு மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் சி.டி.ரவி, தனக்கு முக்கியத்துவம் இல்லாத சுற்றுலா துறையை ஒதுக்கியதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். மேலும் அவர், தனக்கு வழங்கப்பட்ட அரசு காரை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் பல்லாரியில் விவசாய விளைபொருட்களை சந்தை அருகே சாலையில் கொட்டியும், நடுரோட்டில் டயர்களை போட்டு எரித்தும் போராட்டம் நடத்தினர். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் உருவ படத்தையும் அவர்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இப்படி ஒரே நேரத்தில் அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.