ஜப்பான் நாட்டின் நிதி உதவி கிடைத்தவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை கொடிமங்கலம் நாகதீர்த்தம் வைகை ஆற்றுப்பகுதியில் 17. 40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் ஆய்வு செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  மதுரை மக்களின் கோரிக்கையான தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதற்கு முதலமைச்சர் அறிவித்த முல்லைப் பெரியாறு அணையில் இருந்து  24 மணி நேரமும் குடிநீர் கொண்டுவருவதற்கான வழிவகைகளை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. 

முதலமைச்சர் உத்தரவின்படி 48 ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணை தூர்வாரப்பட்டுள்ளது. அதே போன்று வைகை அணையை தூர்வாரும் பணியும் கடந்த ஆண்டே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஆண்டு அதிக மழை பெய்து வைகை அணையில் தொடர்ந்து தண்ணீர் இருந்து வருவதால் வைகை அணையினை தூர் வாரும் பணியில் காலதாமதம் ஏற்படுகிறது. மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் ஜப்பான் நாட்டு நிதி உதவி கிடைத்தவுடன் பணிகள் விரைவில் தொடங்கப்படும். 

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டப்படும் பேருந்து நிறுத்துமிடம் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்படும். இதன் கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.