நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த தற்கொலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதற்கிடையே தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வுகள் நடைபெற்றன. நீட் தேர்வுக்கு எதிராக பல அமைப்புகள் தேர்வு மையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், “கொரோனாவுக்கு பயந்து காணொலி காட்சி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத உத்தரவிடுகிறது” என்று நடிகர் சூரியா விமர்சனம் செய்திருந்தார்.  நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார். இது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.


சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்குக் கூட்டாக கடிதம் எழுதினர். இந்நிலையில் சூர்யாவிற்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கமும் குதித்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பானுமதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ நடிகர் சூர்யா கூறிய கருத்துகள் மக்கள் பலரிடமும் இருப்பதாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள், தீர்ப்புகள் குறித்து கருத்துச் சொல்ல உரிமை உள்ளது. மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு உட்பட்டு, நேர்மையான, வெளிப்படையான, யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத விமர்சனமாக சூர்யாவின் கருத்துகளை எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொண்டது தவறு. நடிகர் சூர்யா மீதும் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்கும் நபர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.