ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்துக் கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா நோய்த் தொற்று பரவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3-ம் தேதியோடு முடிவடைகிற நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது.

கொரோனா பரவலைத் தடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்காக, மத்திய - மாநில அரசுகள் எடுக்கின்ற எந்த முடிவாக இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட்டு சமூக ஒழுங்கைத் தவறாமல் கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும். அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்துக் கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பத்தையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும்.

35 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களின் மனநிலையையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய - மாநில அரசுகள் உரிய முடிவெடுத்து சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும்" என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.