செயற்குழுவில் தனக்கு ஆதரவு இல்லாத நிலையில் கூட்டம் முடிந்து வீடு திரும்பிய ஓபிஎஸ் வாடிய முகத்துடனும் வார்த்தைகள் கூட வராத நிலையிலும் காணப்பட்டார்.

பூரண கும்ப மரியாதை, ஆளுயர மாலை, வீர வாள் என ஏகப்பட்ட பில்டப்புகளுடன் செயற்குழுவிற்கு சென்றார் ஓபிஎஸ். ஆனால் இவை அத்தனையும் செயற்குழு நடைபெற்ற அரங்கிற்கு வெளியே தான். செயற்குழு நடைபெற்ற அரங்கிற்குள் அமைச்சர்கள் சிலருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு கூட ஓபிஎஸ்சுக்கு கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மட்டுமே ஓபிஎஸ்சிடம் சென்று பேசியதாக கூறுகிறார்கள். மற்றவர்கள் வணக்கம் தெரிவித்ததோடு சரி, அருகே சென்று பேசவில்லை என்கிறார்கள்.

ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த நத்தம் விஸ்வநாதன் கூட செயற்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். அதிமுக ஆட்சி தொடர ஓபிஎஸ், எடப்பாடியை ஆதரிக்க வேண்டும் என்கிற ரீதியில் நத்தம் விஸ்வநாதன் பேசியதாக சொல்கிறார்கள். எந்த ஒரு அமைச்சரும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ கூட ஓபிஎஸ்சை ஆதரிக்கவில்லை. தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு சில செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பேசினர். கிட்டத்தட்ட 99 சதவீதம் பேர் செயற்குழுவில் எடப்பாடிக்கு பின்னால்  அணிவகுத்தனர்.

மேலும் எடப்பாடியுடான வாக்குவாதத்தின் போது கூட எடப்பாடியின் பதிலடிக்கு ஓபிஎஸ்சால் பதில் அளிக்க முடியவில்லை. அத்தோடு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று செயற்குழு தீர்மானித்துவிட்டது. அதனை நல்ல நாள் பார்த்து அறிவிக்கலாம் என்று கூறித்தான் ஓபிஎஸ்சால் தள்ளிப்போட முடிந்தது. இதனால் தான் செயற்குழுவில் தன்னால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை என்கிற வருத்தம் ஓபிஎஸ்சுக்கு ஏற்பட்டுள்ளது. ஜாதி ரீதியாக தனக்கு தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று ஓபிஎஸ் எதிர்பார்த்தார்.

ஆனால் அவர்களும் கூட எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்றனர். இதனால் தான் கூட்டம் முடிந்த பிறகு வாடிய முகத்துடன் அங்கிருந்து புறப்பட்டார் ஓபிஎஸ். அதோடு மட்டும் அல்லாமல் தனது வீட்டருகே காரில் வந்தவர் தனது கார் ஜன்னல்களை திறந்தார். அவர் ஏதோ பேசப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால்மைக்குகள் அவர்முன் நீட்டப்பட்டது. பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கூட வாழ்த்து முழக்கங்களை பாதியில் நிறுத்திவிட்டு புறப்பட்டனர். முதலமைச்சர் வேட்பாளரை அக்டோபர் 7ல்அறிவிக்க உள்ளதாக கூறிய கே.பி.முனுசாமி முகத்திலும் கூட ஆரவாரம் இல்லை.

ஆனால் அருகே இருந்த வைத்திலிங்கம், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்பி வேலுமணி போன்றோர் உற்சாகத்தில் இருந்தனர். இதனால் செயற்குழுவில் வெற்றி கிடைத்துவிட்டதாகவே எடப்பாடி தரப்பு ஆனந்த கூத்தாடி வருகிறது.