தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகரும், பாஜக கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

பாஜக நிர்வாகியும், நடிகருமான எஸ்.வி சேகர் அண்மையில் அதிமுக அரசை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தனர். வழக்கு போட்டால் ஓடி ஒளிந்துகொள்வார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். நீண்ட நாட்களாக  எஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசைப்படுவதால் அவர் விரைவில் சிறைக்கு செல்ல நேரிடும் என அமைச்சர் ஜெயகுமார் எச்சரித்து இருந்தார். 

இந்த நிலையில், மீண்டும் தமிழக அரசு மற்றும் முதல்வர் பழனிசாமி குறித்து எஸ்.வி சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், காவி நிறம் களங்கம் என்றால் தேசியக் கொடியில் ஏன் காவி நிறம் என்கிற வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக ராஜரத்தினம் என்பவர் சென்னை போலீசில் புகாரளித்திருந்தார். இந்த நிலையில், தேசியக் கொடியை அவமதித்தாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ”தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் பற்றி அவதூறாகப் பேசியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எஸ்.வி.சேகர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை, அரசு அதை நிறைவேற்றும்” என்று கூறி இருந்தார். தற்போது தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்வதோடு நிறுத்துவார்களா? இல்லை அவர் கைது செய்யப்படுவாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.