தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா..? அமைச்சர் கே.என். நேரு அதிரடி தகவல்..!
தமிழகத்தில் முழு ஊரடங்கைத் தீவிரப்படுத்துவது அல்லது கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் உரிய முடிவெடுப்பார் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கே.என். நேரு திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள சாதாரண மற்றும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் குறித்த விவரம், வென்டிலேட்டர் விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில், தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்தப் பிரிவைத் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்கள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் பொருட்டு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் பயிற்சி பெற்ற மருத்துவ மாணவர்கள் உடனடியாகப் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 7,000 ரெம்டெசிவிர் குப்பிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதில், திருச்சியை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு 300 குப்பிகள் வழங்கப்படுகின்றன. ரெம்டெசிவிர் பற்றாக்குறையைக் களைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக நடவடிக்கையை எடுத்து வருகிறார். இதுகுறித்து மத்திய அமைச்சருடனும் பேசியிருக்கிறார். தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
100 நாட்களில் மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணும் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மனுக்கள் வரப் பெற்றுள்ளன. ஆனால், அந்தப் பணியை தள்ளிவைத்துவிட்டு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதையே முழுப் பணியாக மேற்கொண்டுள்ளோம். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும்.” என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நேரு, “முழு ஊரடங்கைத் தீவிரப்படுத்துவது அல்லது கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் உரிய முடிவெடுப்பார்.” என்று பதில் அளித்தார்.