கருணாநிதி காலத்தில் 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளை திமுகவிடம் பெற்றதைப் போல, இந்த முறையும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற காங்கிரஸ் மேலிடம் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

கடந்த 2004-ம் ஆண்டு திமுக - காங்கிரஸ் கூட்டணி உருவானபோது, மன்மோகன் சிங் நேரடியாக சென்னை வந்து கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாமக, மதிமுக, இடதுசாரிகள் என பல கட்சிகள் கூட்டணியில் இருந்ததால், அட்ஜெஸ்ட் செய்துகொண்டு காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளைப் பெற்றுக்கொண்டது. ஆனால், 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, மதிமுக, இடதுசாரிகள் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாமல் போனதால், காங்கிரஸுக்கு 16 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. 

இந்த முறை மதிமுக, இடதுசாரிகள், விசிக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், 12 தொகுதிகள் வரை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மேலிடத்தில் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் ஓட்டு வங்கி குறைந்துவிட்டது என்றும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வழங்கிய பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதாலும், 6 முதல் 8 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவில் உள்ள தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

 மேலும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் திமுகவிடம் காங்கிரஸ் கேட்டு வருகிறது. ஆனால், இதுவரை திமுக தரப்பிலிருந்து காங்கிரஸுக்கு எந்த உறுதியும் தரப்படவில்லை என்றே கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்திய தொகுதி பங்கீட்டு குழுவினர் அதிகபட்சமாக தமிழகத்தில் 7, புதுச்சேரியில் 1 என 8 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு ஒதுக்கலாம் என பேசியதாக கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்னும் சில தினங்களில் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக முடிவு செய்திருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் பேச்சுவார்த்தையைத் தொடங்க உத்தேசித்துள்ள நிலையில், குறைந்தபட்சமாக 2004-ம் ஆண்டு பெற்றதைபோல தமிழகத்தில் மட்டும் 10 தொகுதிகளையாவது பெற வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்தில் தமிழக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் மேலிடமும் இதில் உறுதியாக இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே சென்னை வந்த தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத், “தொகுதி பங்கீடு தொடர்பான விஷயங்களை காங்கிரஸ் மேலிடம் பார்த்துக்கொள்ளும்” என்று தெரிவித்தார். தொகுதி எண்ணிக்கையை காங்கிரஸ் மேலிடமும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதை தமிழக காங்கிரஸும் திமுகவிடம் பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டில் கருணாநிதி வழியில் தொகுதி பங்கீடு நடந்து முடியும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.