அமமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சசிகலா விரைவில் வெளியே வர இருக்கிறார். அந்த நல்ல செய்தி தமிழக மக்களுக்கு புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் தமிழகத்தில் அம்மாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கட்சியினர் உற்சாகமாகப் பணியாற்றி வருகிறார்கள்.


2021ஆம் ஆண்டு நிச்சயமாக அமமுக தமிழக மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்கக்கூடிய ஆண்டாக அமையும். தமிழகமே திரண்டு வந்து சசிகலவை வரவேற்க காத்திருக்கிறது. சசிகலா வரும்போது அதிமுகவில் இணைவரா அல்லது அமமுக கட்சியில் தொடர்வாரா என பின்னர் முடிவு செய்யப்படும்” எனக் கூறினார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா ஜனவரி 27ஆம் தேதி பெங்களூரூ சிறையிலிருந்து விடுதலையாக உள்ளார்.