ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடம் இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதனால், பெங்களூரு சிறையில் இருந்து சென்னை திரும்பியுள்ள சசிகலா இன்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் செல்வாரா என்ற பரபரப்பு அனைவரும் மத்தியில் எழுந்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை முடிந்து ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையானார். பெங்களூருவில் இருந்து கடந்த 8ம் தேதி சென்னை திரும்பிய அவர், தொடர் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த இரு நாட்களாக சில குறிப்பிட்ட நபர்களை மட்டும் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார். ஏற்கனவே, சசிகலா சென்னை வந்ததும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் அவரை சந்திக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், இதுவரை யாரும் அவரை வந்து சந்திக்கவில்லை. ஒருசில முக்கிய அதிமுக நிர்வாகிகள் மட்டும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. சென்னை திரும்பிய சசிகலா இதுவரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால், அவரின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா அதிமுகவினரால் இன்று கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே, திறக்கப்பட்டு மீண்டும் எஞ்சிய பணிகளை முடிப்பதற்காக மூடப்பட்ட ஜெயலலிதா நினைவிடமும் இன்று திறக்கப்பட உள்ளது. ஆகையால், சசிகலா இன்று ஜெயலலிதா நினைவிடம் வந்து மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அமமுக வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது திநகரில் உள்ள இல்லத்திலேயே ஜெயலலிதாவுக்கு சசிகலா மரியாதை செலுத்த இருப்பதாகவும், இன்று அவர் ஜெயலலிதா நினைவிடம் வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. சிசகலா ஜெயலலிதா நினைவிடம் வரும் பட்சத்தில் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.