ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் ஆரம்பிப்பார். அதை பற்றி நான் கருத்து சொல்ல எனக்கு தகுதி இல்லை என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘’நான் சேரும் கட்சிக்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் ஒரு தேசியவாதி. நாடு தான் முக்கியம் என்று நினைக்கக்கூடியவன். நாட்டை முக்கியமாகவும், அதே போல என் இனத்தையும் மதிக்க கூடிய கட்சியாக இருக்க வேண்டும் என்றும், சாதாரண மனிதனுக்கு அங்கீகாரம் கொடுக்கக்கூடிய கட்சியாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த மூன்றும் பாஜகவிடம் மட்டுமே இருக்கிறது.

நான் பிறந்த இடமும் 25 ஆண்டுகள் வாழ்ந்ததும் தமிழகம் தான். தமிழகத்தில் புது விதமான அரசியல் தேவைப்படுகிறது. அதேபோல இளைஞர்களுக்கு வழிகாட்டக் கூடிய தலைவர் வேண்டும். மக்களை மேலே கொண்டு செல்லக்கூடிய இயக்கம் தேவைப்படுகிறது. இதை என்னால் மக்களுக்கு செய்ய முடியும் என்று தோன்றியது. பாஜகவுக்கு தமிழகத்தில் இன்னும் 5 ஆண்டுகள் கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதனால் தான் இங்கு வந்தேன்.

நான் அதை செய்வேன் இதை செய்வேன் என்று சொல்ல விரும்பவில்லை, கட்சி எனக்கு கொடுக்கும் பணியை, கடமையை சிறப்பாக செய்வேன். என் மனசாட்சியின்படி தமிழக மக்களுக்காக செய்வேன். அது தான் என் நோக்கம். கல்விக் கொள்கையை மக்கள் யாரும் எதிர்க்கவில்லை. மக்கள் இதை முன்னேற்றி செல்லக் கூடிய கொள்கை என்று தான் சொல்கிறார்கள். இதை தமிழகத்தில் இந்தியை திணிக்கிறார்கள் என்று சொல்லி சிலர் திரித்து விட்டார்கள்.

யாரும் இந்தியை திணிக்கவில்லை. மூன்று மொழி படிக்கவேண்டும். அதில் இரண்டு மொழி பிராந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். ஜனநாயகத்தில் கொள்கை என்று வரும் போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது சாதாரணம்தான். அந்த எதிர்ப்புகளில் உண்மை இருக்கிறது என்றால் அதை மாற்ற வேண்டும். அதேபோல நான் கல்விக்கொள்கையை பெரிய விஷயமாக பார்க்கவில்லை.அது நல்ல கொள்கை. சுற்றுசூழல் வரைவு இன்னும் சட்டமாக வில்லை. அது சட்டமாகும் போது அதில் மாற்றங்கள் வரும். அதுவரை அதை பொறுத்திருந்து பார்ப்போம். 
ரஜினி கட்சியில் என்னை இணைத்துப்பேசுகிறார்கள். ரஜினியுடன் என் பேச்சு ஆன்மிகம் சம்மந்தப்பட்டது. ரஜினி மிக சிறப்பான மனிதர். அவருடன் பேசும் போதுதான் அவரின் எண்ணம் வித்தியாசமானது என்று தெரியும். நிச்சயம் அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். அவர் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் ஆரம்பிப்பார். அதை பற்றி நான் கருத்து சொல்ல எனக்கு தகுதி இல்லை. அவர் கட்சி ஆரம்பித்தால் நானும் அதை வரவேற்கிறேன். அவர் மூலம் தமிழகத்துக்கு புது விதமான அரசியல் வரட்டும். என் கண்ணோட்டம் தேசிய அளவில் இருந்ததால் நான் பாஜகவில் சேர்ந்தேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.