ரஜினிகாந்த் அரசியலில் அதிசயம் நிகழும் என தெரிவித்துள்ளார். ஆனால், வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் எப்படி அமையும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும் என்று பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி கோயமுத்தூர் சிறைச்சாலையில், வ.உ.சி. இழுத்த செக்கு மற்றும் அவரது உருவ படத்துக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் வானதி சீனிவாசன் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது பற்றியும், அதிசயம் நிகழ்வும் என்று ரஜினி பேசியது பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 
 “தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொடங்கும் சினிமா கலைஞர்கள் மீது  மக்களுக்கு ஆர்வம் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வரானது குறித்து ரஜினி அவருடைய கருத்தைக் கூறியுள்ளார்.   முதல்வராவது யார் கையில் இருக்கிறது என்ற அர்த்தத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து ரஜினி தெரிவித்திருப்பதாகத் தோன்றுகிறது. அரசியலில் எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கு எந்தப் பொறுப்பு வரும் என்பது தெரியாது.
வருகிற தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்படி அமையும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றியோ கட்சி தொடங்குவதைப் பற்றியோ ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று பாஜகவும் கருதுகிறது. ஆனால், வெற்றிடம் இல்லை என்று அதிமுக கருதுகிறது. ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.