காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பிரியங்காவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துவருகிறது. இதுதொடர்பாக பிரியங்காவை சந்திக்கவும் கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அவ்ரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் தோல்வி அடைந்தன. இதனால், புதிய இடைக்கால தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. இந்நிலையில் உ.பி.யில் சோன்பத்ராவில் நடந்து துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களைச் சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதும்,. அதற்காக அவர் இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம் நடத்தியதும் நாடு முழுவதும் பரபரப்பு செய்தியானது.


இந்திரா காந்தியைப் போல நினைத்ததை செய்துமுடிக்கும் அளவுக்கு பிரியங்காவிடம் உள்ள திறனைக் கண்டு காங்கிரஸ் தலைவர்கள் வியந்தனர்.  இந்த நிகழ்வுக்கு பிறகு பிரியங்காவை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் துளிர்விடத் தொடங்கியது. பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர்சிங், இதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். தற்போதைக்கு காங்கிரஸைக் காப்பாற்ற பிரியங்காவால்தான் முடியும் என்று கூறுவிட்டார். இதேபோல காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த தலைவருமான சசி தரூரும் பிரியங்கா காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல பல்வேறு காங்கிரஸ் கமிட்டிகளிலும் பிரியங்கா தலைவராக வேண்டும் என்ற எண்ணம் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு, அடுத்த வாரம் டெல்லியில் கூட உள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக பிரியங்கா காந்தியை தேர்ந்தெடுக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்த முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநில மேலிட பொறுப்பாளர்களின் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரியங்காவைச் சந்தித்து இதுபற்றி பேசவும் மூத்தத் தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக்வும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகி 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தலைவர் பொறுப்பில் யாரை நிறுத்துவது என்ற கேள்விக்கு இன்னும் காங்கிரஸ் கட்சி விடையைத் தேடவில்லை. காங்கிரஸ் தலைவர் தேடலுக்கு பிரியங்கா காந்தியாவது முற்றுப்புள்ளி வைப்பாரா என்று பாரம்பரிய காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.