அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரின் இந்த முடிவை தான் வரவேற்பதாக  ஜோ பிடன் கூறியுள்ளார். 

கடந்த நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நடைபெற்றது. அதில்  ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றார். ஆனால் இந்த வெற்றியை ட்ரம்ப் ஏற்கவில்லை. தேர்தலில் மோசடிகள் நடந்ததாக குற்றம் சாட்டிய அவரும் அவரின் ஆதரவாளர்களும் நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அது எடுபடவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை பிடனின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் அவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி  அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், ட்ரம்ப் ஆதரவாளர்கள்  பாராளுமன்றத்தை முற்றுகையிட்டதுடன், பிடனின் வெற்றி சான்று வழங்கும் நிகழ்ச்சியை தடுக்கும் நோக்கில் அத்துமீறி பாராளுமன்ற வாளாகத்திற்குள் நுழைய முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு. பின்னர் அது வன்முறையாக வெடித்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இதுவரை அமெரிக்க வரலாற்றில் இது போன்ற நிகழ்வு நடந்ததில்லை என்று கூறும் அளவிற்கு அது மோசமான வன்முறையாக இருந்தது. ட்ரம்ப் ஆதரவாளர்களின் இந்த வன்முறைக்கு சர்வதேச அளவில் மிகப் பெரும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். சுமார்  160 வினாடிகள் ஓடும் அந்த  வீடியோவில் அவர், ஜனாதிபதியாக பணியாற்றியது வாழ்நாள் முழுவதும் ஒரு மரியாதை மிக்க உணர்வை தரும். புதன்கிழமை நடைபெற்ற வன்முறை மிகவும் மோசமானது, கண்டிக்கத்தக்கது, அனைவரும் அமைதியை மீட்டெடுக்க பாடுபட வேண்டும். தலைநகரில் ஊடுருவிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜனநாயகத்தை சேதப்படுத்தியுள்ளனர். 

வன்முறையில் ஈடுபட்டவர்கள் உண்மையான அமெரிக்கர்களாக இருக்க முடியாது. ஜனவரி 20ஆம் தேதி புதிய நிர்வாகம் அமைய உள்ளது. இப்போது எனது கவனம் அனைத்தும் சுமுகமான ஒழுங்கான மற்றும் தடையற்ற அதிகார பரிமாற்றத்தை உறுதி செய்வதில்தான் உள்ளது. என கூறியுள்ளார். இதற்கிடையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்தும் வன்முறையை சம்பவங்களை தொலைக்காட்சியில் பார்த்து நடனமாடி மகிழும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் கருத்து பதிவிட்டுள்ள டரம்ப். வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா என பலரும் என்னிடம் கேட்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்கிறேன். அதில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், சுமுகமான, ஒழுங்கான மற்றும் தடையற்ற அதிகார பரிமாற்றத்தை உறுதி செய்வதாக உறுதியளிக்கிறேன் என்றும்  கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் ஜோ பிடன், எங்கள் இருவருக்கும் ஒத்த கருத்து என்பது மிகக் குறைவு. சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்கு பிறகு அவர் தேசத்திற்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டார். அவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பது அவருக்கு நல்லது. அமெரிக்க வரலாற்றில் மிகவும் திறமையற்ற ஜனாதிபதிகளில் ட்ரம்ப் ஒருவர் என பிடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.