ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.20 லட்சத்தை திருப்பி அளித்துவிட்டால் இந்திய எல்லைப் பகுதிகளிலிருந்து சீனப் படைகள் வெளியேறுவதை பிரதமா் நரேந்திர மோடி உறுதிப்படுத்துவாரா?  நாட்டில் நிலவும் சூழல் குறித்து பேசாமல் தங்கள் இஷடத்திற்கு பாஜக பேசி வருதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்  காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, சீனத் தூதரகத்திடமிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளை நன்கொடை பெற்றதாகவும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.20 லட்சம் நன்கொடை பெற்றதாகவும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒருவேளை ராஜீவ் காந்தி அறக்கட்டளை நன்கொடையாகப் பெற்ற ரூ.20 லட்சத்தை திருப்பி அளித்துவிட்டால் எல்லையில் அத்துமீறி ஊடுருவிய பகுதிகளிலிருந்து சீனப் படைகள் வெளியேறி அங்கு இயல்பு நிலை திரும்புவதை பிரதமா் மோடி உறுதிப்படுத்துவாரா? நாட்டில் தற்போது நிலவும் சூழல் குறித்து ஜெ.பி. நட்டா கருத்து தெரிவிக்க வேண்டும்.கடந்த காலம் குறித்த தகவல்களைத் தங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கூறக் கூடாது. இந்திய எல்லைப் பகுதிக்குள் சீனப் படைகள் அத்துமீறி நுழைந்தது தொடா்பாக நாங்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளியுங்கள் என்று தனது பதிவுகளில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி, ஜூன் மாதம் 22-ஆம் தேதிகளில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை சுட்டிக்காட்டி  சீனப்படைகளின் ஆக்கிரமிப்பு காணப்படுவதைக் குறிப்பிட்டுள்ளார்.