கர்நாடகாவில் இன்று 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியைத் தக்க வைத்துகொள்ள பாஜக 7 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த பிறகு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. எனவே 2 தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில், எஞ்சிய 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று கர்நாடாகவில் தேர்தல் நடைபெறுகிறது.


தகுதிநீக்கம் செய்யப்பட்ட 16 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். அவர்களில் 13 பேரை பாஜக வேட்பாளர்களாக களமிறக்கியது. காங்கிரஸும், மதசார்பற்ற ஜனதாதளமும் தனித்து வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பலம் தற்போது 207 ஆக உள்ளது. தற்போது பாஜகவுக்கு 105எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஒரு சுயேட்சை பாஜகவை ஆதரிக்கிறார். எனவே மெஜாரிட்டிக்கு 104 உறுப்பினர்கள் போதும் என்ற நிலையில், தங்கள் சொந்த பலத்தின் மூலம் எடியூரப்பா ஆட்சி நடத்திவருகிறார்.


தேர்தலுக்கு பிறகு இந்த எண்ணிக்கை 222 ஆக அதிகரிக்கும். அப்போது மெஜாரிடிக்கு 112 உறுப்பினர்கள் தேவைப்படுவார்கள். பாஜகவுக்கு 106 உறுப்பினர்காள் உள்ள நிலையில், இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 6 தொகுதிகளை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அப்போதுதான் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கும். 
சட்டப்பேரவையில் தற்போது காங்கிரஸுக்கு 66 எம்.எல்.ஏ.க்களும் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 34 எம்.எல்.ஏ.க்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒருவரும் என 101 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளன. எதிர்க்கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் எடியூரப்பா ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். டிசம்பர் 9 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது கர்நாடகாவின் தலையெழுத்து தெரியவரும்.