இரண்டு முறை அதிமுகவுக்கு ராசியாக இருந்த மே 23-ம் தேதி மீண்டும் அந்தக் கட்சிக்கு ராசியாகுமா என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
2011-ல் முதல்வராகப் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றதால் 2014 செப்டம்பரில் பதவியை இழந்தார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதவை 2015 மே மாதம் விடுவித்தது. இதனையடுத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். அப்போது அவர் பதவியேற்ற தேதி மே 23.
இதேபோல 2016 சட்டப்பேரவைத் தேர்தல் மே 16 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக - அதிமுகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலனவை திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தன. ஆனால், மே 19 அன்று வாக்குகள் எண்ணப்பட்டபோது, கருத்துக்கணிப்புகளை மீறி அதிமுக 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. 
30 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தவர் என்ற சிறப்புடன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போதும் அவர் முதல்வராக பதவியேற்ற நாள் மே 23-தான். அவருடைய மறைவுக்கு பிறகு தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பாரா இல்லையா என்பதை இன்றைய நாள் (மே 23) தீர்மானிக்கப்போகிறது.
இரண்டு முறை அதிமுகவுக்கு நல்ல நாளை அமைத்து தந்த மே 23 இன்று என்ன செய்யப்போகிறது என்பது பிற்பகலில் தெரிந்துவிடும்.