இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் வருவார்களா மாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இன்று தெரியவரும். இந்நிலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒட்டப்பிடாரத்தில் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். இதேபோல முதல்வரும் அதிமுக இணை இருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி சூலூரில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்.


இடைத்தேர்தலில் திமுகவுக்கு உதவியாக காங்கிரஸ் சார்பில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். இதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 4 நாட்கள் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். இடதுசாரி தலைவர்களும் பிரசாரம் செய்வார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பிரேமலதாவை தவிர்த்து அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துபிரசாரம் செய்வது பற்றிய அறிவிப்பை பிற கூட்டணி கட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை. அந்தந்த தொகுதிகளில் உள்ள நிர்வாகிகள் அதிமுகவுடன் இணைந்து செயல்படுகிறார்கள். அதிமுக வழங்கியுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்கள் எதுவும் இடம் பெறவில்லை. 
பிரேமலதா மட்டுமே பிரசாரத்துக்கு வருவது பற்றி அறிவித்திருக்கிறார். ஒட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு கணிசமாக வாக்கு வங்கி இருப்பதால், அவரை அதிமுக நம்பி இருக்கிறது. அவரும் ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஆனால், பிற கூட்டணி கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக பிரசாரத்துக்கு செல்வது பற்றி இதுவரை அறிவிக்கவில்லை.
அதிமுக சார்பிலும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 4 தொகுதிகளிலும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை அதிமுக களமிறக்கி உள்ளது. எனவே, தமிழிசை, ராமதாஸ், அன்புமணி, வாசன் ஆகியோர் பிரசாரத்துக்கு வருவார்களா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஆனால், தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் இருப்பதால், கூட்டணி கட்சித் தலைவர்கள் இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அதிமுக வேட்பாளர்கள் உள்ளனர்.