ஒரு வேளை மத்தியில் பாஜக கூட்டணி அரசு அமைந்தால், மந்திரி சபையில் அதிமுக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
7 கட்டங்களாக நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தல் முடிந்துவிட்டது. தேர்தல் முடிவு நாளை மறுதினம் வெளியாக உள்ளது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. பாஜகவும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியே பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும் அதிமுக கூட்டணி சராசரியாக 4 - 9 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தக் கருத்துக்கணிப்பு என்பது கருத்துத்திணிப்பு என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒரு வேளை அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றால், மந்திரி சபையில் அதிமுக இடம்பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடைசியாக கடந்த 1998-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தபோது, அதில் அதிமுக அங்கம் வகித்தது. அதன்பிறகு ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால், அதில் பங்கேற்கும் வாய்ப்பு அதிமுகவுக்குக் கிடைக்கலாம்.
இன்று டெல்லியில் பாஜக அளிக்கும் விருந்து நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் அமைச்சரவையில் அங்கம் வகிப்பது பற்றி அதிமுக விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிக அமைச்சர் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார் என்று தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.

 
அதன் அடிப்படையில் அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக முன்வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் தொகுதிகளின் வேட்பாளர்கள் அமைச்சர் கனவில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.