தமிழகத்தில் நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கூட்டணி கட்சித் தலைவர்கள் வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் வேட்பாளர்கள் உள்ளனர்.


திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளில் மே 19 அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மாறிமாறி தீவிர பிரசாரம் செய்துவருகிறார்கள். அதிமுக தலைவர்களைத் தாண்டி அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்னும் பிரசாரத்துக்காக வந்தபாடில்லை.
பாஜக மாநில தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரைத் தேர்தல் பிரசாரத்துக்கு வர வேண்டாம் என்று அதிமுக தலைமையே கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிமுக அழைக்கும் பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்ய தயார் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். ஆனாலும், இதுவரை பாஜக சார்பில் எந்தத் தலைவரும் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வரவில்லை. மாறாக டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருந்த தமிழக பாஜக தலைவர்கள், தற்போது மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமக சார்பில் அதன் தலைவர் ஜி.கே.மணி மட்டும் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தலையைக் காட்டினார். அதன்பிறகு பிரசாரத்துக்கு யாரும் வரவில்லை. குறிப்பாக அதன் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வருவது பற்றி வாய்த் திறக்கவில்லை. சமக தலைவர் நடிகர் சரத்குமார் பிரசாரத்துக்கு வருவார் என அறிவித்தபோதும், இன்னும் களத்துக்கு வராமலேயே இருக்கிறார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா மட்டும் இன்றும் நாளையும் பிரசாரம் செய்வார் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அதிமுக வேட்பாளர்கள். ஒட்டப்பிடாரத்தில் மட்டும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பிரசாரம் செய்திருக்கிறார்.
கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் வராததால், மாவட்ட அளவில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்காமல் ஒதுங்கி நிற்பதாகவும் கூறப்படுகிறது. இடைத்தேர்தல் என்பதாலும் அடிக்கிற வெயிலையும் பார்த்தே கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரத்துக்கு வராமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி கட்சித் தலைவர்கள் வருவதற்குள் தேர்தலே முடிந்துவிடும் என்று வேட்பாளர்கள் அங்கலாய்த்துக்கொண்டாலும்,  இறுதிக்கட்டத்தில் தலைகாட்டுவார்கள் என்ற நம்பிக்கையிலும் அவர்கள் இருக்கிறார்கள்.