ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், எம்பியுமான தர்மர் இன்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகளின் பணிகள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலரும் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு பல்வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடிக்கத் தொடங்கி உள்ளனர். பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்பட்ட மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அவரது அணியில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பன்னீர்செல்வத்துடன் திடீர் நெருக்கம் காட்டிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து நிர்வாககக் குழு தலைவர் என்ற முக்கிய பொறுப்பைப் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் பன்னீரின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான எம்பி தர்மர் தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் மீண்டும் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அதிமுகவில் பழனிசாமி, பன்னீர்செல்வம் என இரட்டை தலைமை நிலவியபோது அதிமுகவில் இரு நியமன எம்பிகளின் பதவி காலியானது. அப்போது பழனிசாமி தரப்பில் சிவி சண்முகமும், பன்னீர்செல்வம் தரப்பில் தர்மர் எம்பிகளாக நியமிக்கப்பட்டனர். இதன் பின்னர் தான் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பன்னீர்செல்வம் மீதான அதிருப்தி அதிகரித்தது.
அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது முதல் அவருக்கு ஆதரவாக தர்மர் செயல்பட்டு வந்த நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.


