தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய் ஆகியோர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் 60-ம் ஆண்டு திரைவாழ்க்கையைக் கொண்டாடும் வகையில், ‘உங்கள் நான்’ என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி முதல்வராவார் என்று கனவில்கூட அவர் நினைத்திருக்க மாட்டார்.  அப்படியே அமைந்தாலும் ஆட்சி நான்கைந்து மாதங்கள் கூட தாங்காது என்றார்கள். 95 சதவீதம் பேர் இதைச் சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. அற்புதம் நடந்தது. ஆட்சி இப்போது நடந்துகொண்டிருக்கிறது. நேற்று நடந்த அந்த அதிசயம் நாளையும் நடக்கும்” என்று பேசினார்.

 
ரஜினியின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தரப்பில் பலரும் பதில் அளித்துவருகிறார்கள். அந்த வகையில் விருதுநகரில் தமிழக பால்வளத்  துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கருத்து தெரிவித்தார். “ரஜினி அவ்வாறு பேசியதில் தவறில்லை. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றுதான் கூறியுள்ளார். எனவே அது ஒன்றும் தவறில்லை. ரஜினி ஓர் ஆன்மீகவாதி என்பதால், நாளை எதுவும் நடக்கும் என்ற ஆன்மிக கோணத்தில்  இதைக் கூறியிருக்கிறார். ரஜினியைப் பொறுத்தவரை ‘பாட்ஷா’ படத்தின்போதே அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், ரஜினி காலம் தாழ்த்திவிட்டார்.

 
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேசும்போது, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெல்ல வேண்டும் என்பதற்கு எந்தவித சித்து விளையாட்டுகளும் செய்யவோம் எனப் பேசியது உண்மைதான். தேர்தலில் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களை  நாங்கள் களமிறக்குவோம். தமிழகத்தில் ரஜினி, கமல், விஜய் ஆகியோர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?” என்று அதிரடியாகக் கேள்வி கேட்டுவிட்டு சென்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.