உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு போதிய இடங்கள் ஒதுக்காததால் விஜயகாந்தும், பிரேமலதாவும் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் 91 ஆயிரம் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் தேமுதிக சார்பில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் ஏன் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தலைவர்கள் பெரும்பாலும் பெரிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடமாட்டார்கள். ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு விஜயகாந்த் 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சித்தேர்தலில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். இதேபோல விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபிறகு பிரேமலதா தேர்தல் பிரசாரம் செய்யாத தேர்தலே கிடையாது.


உள்ளாட்சித் தேர்தலில்கூட மாநிலம் முழுவதும் கடந்த காலங்களில் விஜயகாந்த் பிரசாரம் செய்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம் செய்ததால், உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜயகாந்த் மட்டுமல்ல, பிரேமலதா விஜயகாந்தும் பிரசாரம் பக்கம் தலைவைத்து பார்க்கவில்லை. முதல் கட்ட தேர்தல் நடந்தபோது, அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி சிறிய அளவிலான அறிக்கை ஒன்றை விஜயகாந்த் விட்டதோடு சரி. இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். விஜயகாந்த் வராவிட்டாலும், பிரேமலதா பிரசாரத்துக்கு வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த தேமுதிக வேட்பாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.


தேமுதிக சார்பில் ஏன் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் பிரசாரத்துக்கு வரவில்லை என்று தேமுதிக வட்டாரங்களில் விசாரித்தபோது, “நாடாளுமன்றத் தேர்தலில் முதலில் வந்த பாமகவுக்கு அதிக இடங்களை அதிமுக ஒதுக்கியது. எங்களுக்கு 4 இடங்கள் மட்டுமே தந்தார்கள். எனவே உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு 20 சதவீதம் பங்கீடு வேண்டும் என்று தொடக்கம் முதலே கோரிக்கை வைக்கப்பட்டுவந்தது. ஆனால், ஊரக உள்ளாட்சிகளில் பேசியபடி இடங்கள் ஒதுக்கப்படவில்லை. குறைவாகவே இடங்களை ஒதுக்கினர். இதனால், விஜயகாந்துக்கும், பிரேமலதாவுக்கும் அதிருப்தி ஏற்பட்டது. கடந்த காலங்களைப் போல அல்லாமல், இந்த முறை தேர்தல் பிரசாரத்தில் எங்கள் தலைவர்கள் ஈடுபடாமல் போனதற்கு அது முக்கிய காரணம்” என்று தெரிவித்தன.