இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம். முக்கிய தலைவர்கள் தலை தெறிக்க வளைய வந்து கொண்டிருக்கிறார்கள் மாநிலத்தை. வேன்களில் முக்கிய அரசியல் வி.ஐ.பி.க்கள் கடும் வெயிலில் நின்றபடி பேசிக் கொண்டே செல்ல ‘என்ன இருந்தாலும் பாவம்யா! இந்த வேகாத வெயில்ல...’ என்று வருந்துகிறது சனம். ஆனால் அதே வேனின் உட்புறம் தலைவர்களின் மனைவிமார்கள் கிட்டத்தட்ட ஒரு கிச்சன் எஃபெக்ட் உடன் அமர்ந்திருந்து, கணவரின் உடல்நிலையை கவனித்துக் கொள்வது பாவம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. 

அது அவசியமுமில்லை என்பது இரண்டாவது கருத்து. ஆனால், தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், ‘நான் தளபதியின் வேனில், அவரோடு பிரசாரத்தில் இருக்கிறேன்’ என்று வெளிப்படையாக அறிவித்துள்ளதோடு, இந்த பிரசார அனுபவத்தையும் வரிந்து கட்டி விளக்கியிருக்கிறார். 


அதில் சில ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், அடர்த்தியான அரசியல் எனப் பல விஷயங்கள உள்ளன. அதன் ஹைலைட் பாயிண்டுகள் இதோ....

* மார்ச் 20-ம் தேதி திருவாரூர்ல  பிரசாரத்தை ஸ்டார்ட் பண்ணினாங்க இவங்க (ஸ்டாலின்). முதல் நாளே அங்கே கிளம்பினோம். போறதுக்கு முன்னாடி கோபாலபுரம் சென்று அத்தைக்கிட்டே (தயாளு அம்மாள்) சொல்லிட்டு கிளம்புனோம். திரூவாரூர் காட்டூர்ல இருக்குற ஆத்தா (அஞ்சுகம் அம்மாள்) சமாதிக்கு போயி மரியாதை பண்ணிட்டுதான் ரூமுக்கு போனோம். இவரு மட்டுமில்லை, மாமாவும் (கருணாநிதி) எந்த எலெக்‌ஷன் பிரசார டூரையும் ஆத்தா சமாதியை கும்பிட்டுட்டுதான் ஆரம்பிப்பாங்க. 

* காலையில 10 மணிக்குதான் பிரசாரம். ஆனால் அதிகாலையிலேயே எந்திருச்சு, குளிச்சுக் கிளம்பிடுவார் தளபதி. உழவர் சந்தை, மார்க்கெட், வாக்கிங் ஏரியாக்கள்னு போயி மக்களை சந்திக்கிறது, கூட்டணி தலைவர்களோடு ஹோட்டல்ல டீ சாப்பிட்டபடி ஆலோசிக்கிறதுன்னு ஜனரஞ்சகப்படுத்துறார். 

* அவரு கழக இளைஞரணியில் இருக்குறப்ப கை பிடிச்ச எனக்கு, இன்னைக்கு கழக தலைவராகவே ஆகிட்ட அவரிடம் எந்த வித்தியாசமும் தெரியலை. ஆளும் அப்படியே இருக்கிறார், அந்த இளைஞர் ஸ்டைல் உழைப்பும் அப்படியே இருக்குது. ரோடு, காடு, மேடுன்னு பார்க்காம சட்டுன்னு இறங்கி நடக்கிறார். மக்கள் வந்து கை கொடுக்கிறாங்க, நெருக்குறாங்க, தள்ளுறாங்க, அமுக்குறாங்க.  எல்லாவற்றையும் மக்களுக்காக தாங்கிக்கிறார் தளபதி. 

* திருச்சி சுற்றுவட்டாரத்துல பிரசாரம் நடந்தப்ப நான் வெக்காளியம்மன் கோயிலுக்கும், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கும் போயிட்டு வந்தேன். எப்ப நான் திருச்சி வந்தாலும் இந்த ரெண்டு கோயில்களுக்கும் போகாம இருக்க மாட்டேன். 

* நைட்டு எவ்வளவு லேட்டா படுத்தாலும், மறுநாள் பிரசாரத்துக்கு குறிச்ச டைம்ல கிளம்பி நிக்குறதுதான் இவங்க ஸ்டைல். சோர்வே அறியாத மனிதர். 

* அவரோட உடம்பு உஷ்ணத்தை குறைக்கிற மாதிரி, இளநீர், நீர்மோர், தர்பூசணின்னு அப்பப்போ எடுத்துக் கொடுப்பேன். மாலை நேரம்னா ஹார்லிக்ஸ், டீன்னு கொடுப்பேன். ஆனா நல்ல வேளையா அவருக்கு கண்ட இடத்துலேயும் கண்டதையும் வாங்கி சாப்பிடுற பழக்கம் இல்லை. 

* எங்களுக்காக தன்னோட வீட்டுல இருந்து சமையல் செஞ்சு ஆசையா எடுத்துட்டு வர்ற கட்சி நிர்வாகிகள், தளபதிக்கு மட்டும் காரம், எண்ணெய் இல்லாம செஞ்சு கொண்டு வருவாங்க. 

* வேனுக்குள்ளே ச்சும்மா உட்கார்ந்து கவனிக்குற எனக்கே இவ்வளவு அலுப்பா இருக்குது. ஆனா இவரு ஒவ்வொரு பாயிண்டிலும் நின்னு, நரம்பு தெறிக்க பேசுறாரு, ஆனாலும் டயர்டாவுறதே இல்லை. 

* போற இடத்திலெல்லாம் மக்கள் இவங்க கையை பிடிச்சுக்கிட்டு ‘தமிழ்நாட்ட காப்பாத்துங்க தளபதி’ன்னு கண்ணீர் வடிக்கிற பார்க்கிறப்ப உள்ளுக்குள்ளே உட்கார்ந்து நான் அழுவேன். 

* தேனி மாவட்டம் உசிலம்பட்டியில் நைட்ல எங்க வேன் போயிட்டு இருந்துச்சு. திடீர்னு சில பெண்கள், பொண்ணுங்க ஆக்ரோஷமா ஓடி வந்து வண்டியை மறிச்சாங்க. தளபதி இறங்கி ‘என்னம்மா?’ன்னு கேட்டதும், “அய்யா காப்பாத்துங்க. மாசாமாசம் ரேஷன் கூட உருப்படியா தர மாட்டேங்கிறாங்க. வயசானவங்களுக்கான பென்ஷனும் வரமாட்டேங்குது. ஸ்காலர்ஷிப் ஒழுங்கா கொடுக்காததாலே பொண்ணுங்க மேல்படிப்பை தொடர முடியல.”ன்னு அழ, இளம் பொண்ணுங்களும் தளபதியை பார்த்து கைகூப்பி அழுதுச்சுங்க. 

என்னமோ எங்க பொண்ணு எங்களப் பார்த்து அழுற மாதிரி உடைஞ்சுட்டோம். ‘நிச்சயம் நல்லது நடக்கும்மா விரைவில்’ன்னு ஆறுதல் படுத்திட்டு வந்து வேனில் ஏறிய தளபதியின் கண்கள் ஆதங்கத்திலும், வருத்தத்திலும் குளமாகியிருந்துச்சு. ...............இப்படியாக தொடர்கிறது துர்காவின் விவரிப்பு. இந்த நிலையில், தன் மாவட்டத்தில் இப்படி பெண்கள் ஸ்டாலினிடம் நிர்வாகத்தை அசிங்கப்படுத்திவிட்டனர் என்று ஏக டென்ஷனில் இருக்கிறாராம்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அந்த பெண்கள் சொன்னதெல்லாம் உண்மைதானா? என்று விசாரிக்க உத்தரவிட்டு, ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தால் ‘ஆம்’ என்று பதில் வந்ததாம். தமிழ்நாடு முழுக்க ரிப்போர்ட் வாங்கிப் பாருங்க துணை. அதே பதில்தான் வரும்.