Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைன்ரம்மி விளையாட்டை தடை செய்ய ஏன் மறுக்குறீங்க.. சந்தேகமா இருக்கே.. திமுக அரசு மீது சீமான் சரமாரி அட்டாக்!

இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, யாருடைய நலனுக்காக இன்றுவரை தடைசெய்ய மறுத்து ஏமாற்றி வருகிறது  என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Why refuse to ban online rummy game .. Doubtful .. Seaman attack on DMK government!
Author
Chennai, First Published Jun 7, 2022, 9:39 PM IST

இதுதொடர்பாக சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை மணலியைச் சேர்ந்த தங்கை பவானி இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இணையவழி சூதாட்டங்கள் விரைவில் தடைசெய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்து ஐந்து மாதங்களாகியும், இதுவரை தடை செய்யாமல் காலங்கடத்தி வரும் திமுக அரசின் மெத்தனப்போக்கே தற்போது தாய் பவானியை இழந்து அவரது இரு குழந்தைகள் பரிதவிக்க முதன்மை காரணமாகும். குறுக்குவழியில் அதிகப் பணம் ஈட்டுவதற்கான ஆசையைத் தூண்டி இளைஞர்களை மாய வலையில் விழவைக்கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்குப் பேராபத்தாக மாறி நிற்கிறது. 

Why refuse to ban online rummy game .. Doubtful .. Seaman attack on DMK government!

இணையவழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றி வாழ்வின் முன்னேற்றப் பாதையிலிருந்து இளைய தலைமுறையினரைத் திசை மாற்றுகிறது. மேலும், நேர்மை, உண்மை, துணிவு, தன்னம்பிக்கை உள்ளிட்ட அடிப்படை மனித நற்பண்புகளை அழித்து, இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, அவர்களின் வாழ்வினையே பாழ்படுத்துகிறது என்பதும் வலிமிகுந்த உண்மை. இதனை உணர்ந்தே நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூகநல ஆர்வலர்களும் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, இணையவழி சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க, கடந்த அதிமுக ஆட்சியின்போது அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 

அதன்பின், இணையவழி சூதாட்ட கும்பல்கள் நீதிமன்றம் மூலம் தடை நீக்கம் பெற்றபோதிலும், அடுத்த ஆறு மாதத்திற்குள் வலுவான சட்டம் இயற்றி, முறையாகத் தடைசெய்யுமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் இணையவழி சூதாட்டங்கள் தடை செய்யப்படும் என்று உறுதியளித்தார். உயர் நீதிமன்றம் விதித்த காலக்கெடு பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்த நிலையில், முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்து ஐந்து மாதங்களாகியும், இன்றளவும் இணைய வழி சூதாட்டங்களைத் தடை செய்ய மறுத்துவருவது திமுக அரசின்மீது மிகப்பெரிய ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, யாருடைய நலனுக்காக இன்றுவரை தடைசெய்ய மறுத்து ஏமாற்றி வருகிறது என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுகிறது.

Why refuse to ban online rummy game .. Doubtful .. Seaman attack on DMK government!

இதுவரை இளைஞர்கள் மட்டுமே பலியாகிவந்த நிலையில், தற்போது தங்கை பவானி போன்ற இளம்பெண்களும் பலியாகும் கொடுமைகள் அரங்கேறிய பிறகும் திமுக அரசு தொடர்ந்து மௌனம் காப்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும். இணைய வழி சூதாட்டங்களைத் தடைசெய்யாமல் இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்க திமுக அரசு காத்திருக்கின்றது? தாயை இழந்து, தந்தையை இழந்து இன்னும் எத்தனை, எத்தனை குழந்தைகள் பரிதவிக்க திமுக அரசு காரணமாகப் போகின்றது? ஆகவே, மக்களின் நலத்தில் அணுவளவாயினும் அக்கறை இருக்குமாயின், குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய உடனடியாக வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டுமென்று தமிழக அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios