காதலியுடன் பேசியதாக  விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் அங்கு காவல் உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்தது. 

காதலியுடன் பேசியதாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் அங்கு காவல் உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்தது.

தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொலை, கூலிப்படை கொலைகள், அரசியல் பழிவாங்கும் கொலைகள் என அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசும் காவல் துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் போலீசாரும் அங்கங்கே தாக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படியான சம்பவம் சென்னை கே.கே நகரில் நடந்துள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் சென்னை கேகே நகரை சேர்ந்த ஜெயந்த் என்ற இளைஞர் அதே பகுதியில் உள்ள அவரது முன்னாள் காதலி வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அதனைக் கண்ட அந்த பெண்ணின் தந்தை ஜெயந்தைப்பிடித்து கேகே நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

இதனை விசாரிப்பதற்காக உதவி ஆய்வாளர் செந்தில் என்பவர் அந்த இளைஞரை அழைத்து பேசினார். அப்போது காவல் நிலைய வாசலில் காவல் உதவி ஆய்வாளர் ஜெயந்தை மரியாதை குறைவாக அந்த இளைஞர் பேசினார். இதனால் கோபமடைந்த உதவி ஆய்வாளர் செந்தில், அந்த இளைஞரை காவல் நிலையத்திற்குள் பிடித்து இழுத்தார், அப்போது அவருடன் உள்ளே செல்ல மறுத்து உதவி ஆய்வாளர் செந்திலை ஜெயந்த் கடுமையாகத் தாக்கினர். இதில் முகத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளர் செந்தில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது ஜெயந்த் கடந்த ஒரு ஆண்டு காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை முடிந்து நேற்று அவர் வீட்டுக்கு திரும்பிய நிலையில் தனது முன்னாள் காதலியை சந்தித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இச் சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் மீது கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.