கேசிஆர் ஒதுக்கி வைத்த காங்கிரஸ் கட்சிக்கு மகளும் எம்எல்சியுமான கவிதா திடீர் அழைப்பு; சோனியாவுக்கு பாராட்டு மழை
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதன் முறையாக காங்கிரஸ் கட்சிக்கு பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி எம்எல்சியும், தெலங்கானா முதல்வரின் மகளுமான கவிதா இன்று அழைப்பு விடுத்து இருக்கிறார்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று டெல்லி, ஜந்தர் மந்தரில் கவிதா ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறார். இவரது போராட்டத்திற்கு 18 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுவரை காங்கிரஸ் கட்சியை கேசிஆர் ஒதுக்கியே வைத்து இருந்தார். முதன் முறையாக தற்போது பெண்கள் மசோதாவை ஆதரிக்க குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு கவிதா அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் சேர வேண்டும் என்று சந்திரசேகர ராவ் அழைப்பு விடுத்து வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்து வந்தார். நாட்டின் அழிவுப் பாதைக்கு காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும்தான் காரணம் என்று கூறி வந்தார்.
வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் யாரையும் சந்திக்கவில்லை.
ஆனால், இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களுக்கு கவிதா அளித்த பேட்டியில், ''பெண்கள் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்ததற்கு சோனியா காந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் ஆட்சியில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதேபோல் அடல் பிகாரி வாஜ்பாயும் அக்கறை எடுத்துக் கொண்டார். காங்கிரஸ் சார்பில் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள பிரதிநிதிகள் யாரையாவது அனுப்ப வேண்டும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோரை கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த மசோதாவுக்கு 18 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் இன்றைய உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர்'' என்றார்.
அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது குறித்த கேள்விக்கு, ''அமலாக்கத்துறைக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்குவேன். ஆனால், தெலங்கானாவில் எம்.எல்ஏ.,க்களிடம் பேரம் பேசிய குற்றச்சாட்டில் ஏன் பாஜகவைச் சேர்ந்த பிஎல் சந்தோஷ் சிபிஐ விசாரணையில் இருந்து தப்பித்து வருகிறார் என்பதையும் இந்த நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும். ஐதராபாத்தில் எனது வீட்டில் வைத்து விசாரிக்குமாறு அமலாக்கத்துறையிடம் கேட்டேன். ஆனால், அதிகாரிகள் மறுத்துவிட்டனர்'' என்று தெரிவித்தார்.
இன்றைய உண்ணாவிரத கூட்டத்தில் பேசிய கவிதா, ''மசோதா நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவும். நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை பாஜக நிறைவேற்ற வேண்டும். இந்த மசோதாவை நிறைவேற்றும் வரை போராட்டம் ஓயாது'' என்றார். சிபிஐ (எம்) பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரியும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்.