மாமல்லபுரத்திற்கு நுழைவு கட்டணம் வசூலிப்பது எதற்கு? குப்பை கிடங்கிற்குள் நுழைவதற்கா என மாமல்லபுரம்  பேரூராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக கேள்வி  எழுப்பியுள்ளது.

மாமல்லபுரத்திற்கு நுழைவு கட்டணம் வசூலிப்பது எதற்கு? குப்பை கிடங்கிற்குள் நுழைவதற்கா என மாமல்லபுரம் பேரூராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு வரும் நிலையில் உயர்நீதிமன்றம் இவ்வாறு விமர்சித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம்பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் கொட்டப்பட்டு வருவதுடன், குப்பை பிரிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக தனியார் வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அதில் மாசுக்கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிகளை பின்பற்றி குப்பை பிரிக்கும் பகுதி அமைக்காதது ஏன் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் மட்டும் அனுப்பியது என்றும், ஆனால் அதன் பிறகு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையியில் அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், குப்பை கிடங்கில் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய பெண் வழக்கறிஞர்கள் என்.டி நானே என்பவரை நீதிமன்றம் ஆணையராக நியமித்து உத்தரவிட்டது. இந்த வழக்கை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அதே சமயம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், விதிமீறல் தொடர்பாக மாமல்லபுரம் நகராட்சி செயல் அதிகாரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதி மன்ற ஆணையர் அளித்த அறிக்கையில் 2008 ஆம் ஆண்டு முதல் கிடங்கு செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை முறையாக ஏன் பராமரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன்.

அதை முறையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்காதது துரதிருஷ்டவசமானது எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரியை தண்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய நீதிபதிகள், பேரூராட்சி நுழைவு கட்டணம் வசூலிப்பது குப்பைத் கிடங்குக்குள் மக்கள் நுழைவதற்கா என கேள்வி எழுப்பியதுடன், அரசு அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.