பாஜகவில் இணைந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள், அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் தாய்க் கழகத்தில் கு.க. செல்வம் இணைந்திருக்கிறார். பாஜகவிலிருந்து விலகியதற்கான காரணங்களை கு.க. செல்வம் அடுக்கியிருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்திருக்கிறார் ஆயிரம் விளக்கு மாறி எம்.எல்.ஏ. கு.க செல்வம்.

திமுக தலைவரான மு.க. ஸ்டாலின் 1989, 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஸ்டாலின் கொளத்தூருக்கு மாறிய பிறகு, கடந்த 2016-ஆம் ஆண்டில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நிறுத்தப்பட்டவர் கு.க. செல்வம். இந்தத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வளர்மதியைத் தோற்கடித்து கு.க. செல்வம் எம்.எல்.ஏ. ஆனார். அதோடு திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளராகவும் தலைமை செயற்குழு உறுப்பினராகவும் கு.க. செல்வம் இருந்தார். ஸ்டாலினுக்கு அவருடைய குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமாக இருந்தார் கு.க. செல்வம். 2020-ஆம் ஆண்டில் மேற்கு சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் மறைவுக்குப் பிறகு மாவட்டச் செயலாளர் பதவியை கு.க. செல்வம் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், இளைஞரணியைச் சேர்ந்த சிற்றரசுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதால், அதிருப்தி அடைந்தார் கு.க. செல்வம். 

அதைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்ட பாஜக, வி.பி. துரைசாமியை வைத்து கு.க. செல்வத்தை வளைத்தது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து கு.க. செல்வம் திமுக தலைமைக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். திமுகவிலிருந்து எம்.எல்.ஏ. ஒருவரை தங்கள் பக்கம் இழுத்ததால், தமிழக பாஜக பெரும் மகிழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கு.க. செல்வத்துக்கு பாஜக சீட்டு வழங்கவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை நிறுத்தியது. தேர்தலுக்குப் பிறகு கடந்த 9 மாதங்களாக பாஜகவில் இருந்த கு.க. செல்வம், இன்று திடீரென அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார். பாஜகவிலிருந்து விலகி திமுகவில் தன்னை இணத்துக்கொண்டார். பாஜகவில் இணைந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள், அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் தாய்க் கழகத்தில் கு.க. செல்வம் இணைந்திருக்கிறார்.

 பின்னர் கு.க. செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டத்துக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்தும் நீட் தேர்வுக்கு விலக்கு தராததை கண்டித்தும், ஜி.எஸ்,டி. நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்தும், ஆளுநரை மாற்றாததைக் கண்டித்தும், தமிழகத்ஹை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பதைக் கண்டித்தும், மதமோதல்களை ஏற்படுத்துவதைக் கண்டித்தும் நான் பாஜகவிலிருந்து விலகி தாய்க் கழகத்துக்கு வந்துவிட்டேன். அண்ணன் - தம்பிக்கு இடையே பிரச்சினை ஏற்படுவதைப் போலத்தான் வெளியே சென்றேன். மீண்டும் திரும்பி வந்துவிட்டேன். மு.க. ஸ்டாலின் 8 மாதங்களில் சிறப்பாக ஆட்சியை நடத்தியிருக்கிறார். இப்போது மட்டுமல்ல, அடுத்த 5 ஆண்டுகளுக்கு திமுகதான் வெற்றி பெறும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் பகுதிகளில் திமுக வெற்றிக்கு பாடுபடுவேன்” என்று கு.க. செல்வம் தெரிவித்தார்.