பியூஷ் மானுஷ் பாஜக அனுவலகத்துக்கு எதற்காக சென்றார் என்பது அவரது முகநூல் நேரலை காணொளி மூலம் தெளிவாகத் தெரிகிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் பொருளாதாரத்தேக்கம் குறித்து சேலம் பா.ஜ.க. அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் நிர்வாகிகளை நோக்கிக் கேள்வி எழுப்பியதற்காக அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ள செயல் கண்டனத்திற்கு உரியது.

கருத்தைக் கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். தாக்குவதும், மிரட்டுவதுமான வன்முறைச்செயல்களில் ஈடுபடுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. பியூஷ் மானுஷ் பா.ஜ.க. அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழையவுமில்லை. சண்டை, சச்சரவில் ஈடுபடும் நோக்கத்தோடு செல்லவுமில்லை என்பது அவரது முகநூல் நேரலை காணொளி மூலம் தெளிவாகத் தெரிகிறது. பியூஷ் மானுஷ் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தர்க்கரீதியாக வாதம் மட்டுமே செய்கிறார்.

பா.ஜ.க. நிர்வாகிகள் மிக மோசமாக ஒருமையில் பேசி மிரட்டியதால் அவ்விடத்தை விட்டு நகர்கிறார். அதன் பிறகே அவர் மீது பா.ஜ.க.வின் நிர்வாகிகள் கோரத்தாக்குதலை நடத்தி உள்ளனர். இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது ஓர் அரசின் தலையாயக் கடமை. பியூஷ் மானுஷை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.