அனைத்துக் கட்சி கூட்டத்தில் தினகரனை அழைக்க வேண்டாம் என ஆளும் அதிமுக அரசு முடிவெடுத்ததின் பின்னணி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
 முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 10 சதவீதம் பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமல்லாமல், சிறிய கட்சிகள் கூட அழைக்கப்பட்டிருந்தன.


முதன் முறையாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது. ஆனால், தினகரன் பொதுச் செயலாளராக இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு தமிழக அரசு அழைப்பு அனுப்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக 5.3 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருந்தது. திமுக, அதிமுக கூட்டணிக்கு பிறகு தமிழகத்தில் அதிக ஓட்டுகளைப் பெற்ற கட்சி அமமுகவே உள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தினகரனைவிட குறைவாக வாக்கு சதவீதம் பெற்ற கட்சிகளுக்குக் கூட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், தினகரனுக்கு ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வியே பொதுவெளியில் எழுப்பப்படுகிறது.
தமிழகத்தில் ஒரு பொது விஷயம் பற்றி கருத்து கேட்கும்போது எல்லோரையும் அழைப்பதுதானே முறை என அமமுகவினரும் ஆதங்கப்படுகின்றனர். ஆனால், அதிமுக தரப்போ, தினகரனை அழைக்க விரும்பாமல் போனதற்கு வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். இதுகுறித்து அக்கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, “தொடக்கம் முதலே தினகரன் கட்சியை ஒரு கட்சியாக அதிமுக நினைக்கவில்லை. தினகரன் ஒரு தனி மரம் என்று முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் விமர்சித்துவருகிறார்கள். இப்போது அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைத்து ஏன் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதால் அழைக்கவில்லை” என்று தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு காவிரி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி நடந்தபோதும் தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அப்போது கமல்ஹாசனையும் தமிழக அரசு அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.