2017 டிசம்பர் இறுதி நாட்களில் ‘ஆம்! நான் அரசியலுக்கு வருகிறேன்!’ என்று ரஜினி அறிவிக்கும் முன்பே, அவருக்கான கொள்கை பரப்பு செயலாளராக மாறியவர் தமிழருவி மணியன். 

ஒருகாலத்தில் விஜயகாந்தை முதல்வராக்குவேன்! என்றும், பின் வைகோவையும், அதன் பின் வாசனையும் தாங்கிப் பிடித்தவர். அதன் பிறகு சட்டென ஒரு டர்ன் அடித்து நேரடியாக ரஜினியின் கூடாரத்தில் ஐக்கியமானார். இப்போது ரஜினியே தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து விறுவிறுவென பணிகளில் இறங்கிவிட்டதும் தமிழருவியின் பணி தலைக்கு மேல் போய்விட்டது. 

இந்நிலையில், ரஜினியே யோசிக்காத வண்ணம் சட்டென கமல் களத்தில் குதித்து அவரை ஓவர் டேக் செய்து கட்சியையே துவக்கிவிட்டார். இருவருக்குமிடையில் மிக கடுமையான போட்டி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கமல்ஹாசன் பற்றி வாய் திறந்திருக்கும் ரஜினியின் கொ.ப.சே.வான தமிழருவி மணியன்...

“ரஜினியை முந்திக்கொண்டு கமல் அவசரமாக அரசியலுக்கு வந்ததன் காரணத்தை அவரேதான் சொல்ல வேண்டும். ரஜினிக்கு எதிராக கமலை இயக்க, அவருக்கு பின்னால் ஒரு சக்தி இருக்கிறதா? அவரை யாராவது தூண்டி விடுகிறார்களா! என்பதையெல்லாம் கால ஓட்டத்தில் நிச்சயம் தெரிந்து கொள்ளலாம். 

ஜெயலலிதாவின் ஆட்சியில் தனக்கு சங்கடங்கள் ஏற்பட்டதாக கமல் கூறியிருக்கிறார். நாட்டை விட்டுப் போய்விடலாமா? என்று நினைக்குமளவுக்கு மனம் காயப்பட்டதாகவும் கூறினார். அதற்கு மருந்து தேடும் முயற்சிதான் அவரது அரசியல் பிரவேசம்! என நினைக்கிறேன். 
ரஜினியையும், கமலையும் பா.ஜ.க. இயக்குவதாக கூறுவது ஒரு மாய கற்பனை. இருவரும் தங்களின் சொந்த செல்வாக்கை வைத்தே களம் இறங்குகிறார்கள்.

தேர்தல் செலவுக்கு பொருளாதார உதவி கேட்டால், இருவருக்கும் கொட்டி கொடுக்க ஆட்கள் உள்ளனர். அந்தளவுக்கு அரசியலல்லாத நபர்களை சம்பாதித்து வைத்துள்ளனர். தனது சம்பாத்தியத்தையும் கட்சிக்காக கொட்ட தயாராக இருக்கிறார் ரஜினி. அதனால் பணத்துக்காகவோ, வேறு  காரணங்களுக்காகவோ இருவரும் பா.ஜ.க. முன் மண்டியிட வேண்டிய அவசியமில்லை. 

தினமும் பல்வேறு துறை நிபுணர்களை சந்தித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி.

அசவர கதியில் கட்சி துவங்கி, பின் ஒன்றும் புரியாமல் தேங்கி நிற்க கூடாது! என்பதில் தெளிவாக இருக்கிறார் ரஜினி.” என்று ஆன் தி வேயில் கமலை கவிழ்த்தி இருக்கிறார் தமிழருவி மணியன்.