தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலையொட்டி ஏபிபி - சிவோட்டர் இணைந்து இந்த மாநிலங்களில் கருத்துக்கணிப்புகளை நடத்தின. அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.  இதன்படி மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியே தொடரும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 294 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 154 முதல் 162 இடங்களில் வெல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பாஜக 98-106 தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி 26-34 இடங்களை மட்டும் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகள் உள்ள தமிழகத்தில் திமுக கூட்டணி 158 - 166 இடங்களில் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 60 - 68 இடங்களில் மட்டுமே வெல்லும். டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக 2 - 6 இடங்களிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2-4 தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் 36.4 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 25.5 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 10.9 சதவீதமும் பெற்றுள்ளார். சசிகலாவுக்கு 10.6 சதவீத ஆதரவும், கட்சி தொடங்காத ரஜினிக்கு 4.3 சதவீத ஆதரவும், கமல்ஹாசன் 3.6 சதவீத ஆதரவும் பெற்றுள்ளனர். 
140 இடங்களைக் கொண்ட கேரளாவில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வார்கள் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இடது ஜனநாயக முன்னணி 80 - 89 இடங்களில் வெல்லுயும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 49 - 57 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் வெல்லும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்றும் கருத்துக்கணிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.