மேற்கு வங்காளத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் அமரும் என்று பேசினார். “ஒவ்வொரு நாளும் வன்முறை நடப்பதாகக் கூறி எனது ஆட்சிக்கு எதிராக மத்திய அரசு சதி செய்துவருகிறது. உத்தரபிரதேசத்தில் என்ன நடக்கிறது? அந்த மாநிலத்தில் உள்ளவர்கள் போலீசில் புகார் அளிக்க பயப்படுகிறார்கள். ஒரே சம்பவத்தில் பல போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் வளங்களை மத்திய அரசு அழிக்கிறது. அடுத்த ஆண்டு மேற்கு வங்காளாத்தில் நடைபெறும் தேர்தலில் மக்கள் அநீதிக்கு பொருத்தமான பதிலைக் கொடுப்பார்கள். திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் அரசு அமைக்கும். அடுத்த தேர்தல் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் ஒரு புதிய திசையைக் காட்டும்” என்று மம்தா பேசினார்.


மம்தாவின் இந்தப் பேச்சுக்கு மேற்கு வங்க பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் திலீப்கோஷ் கூறுகையில், “பேரணி ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, 95 சதவீதம் பாஜகவை பற்றியே பேசியுள்ளார். பாஜகவை கண்டு அவர் பயப்படுவதை இது காட்டுகிறது . இதற்காகவே தன்னுடைய கூட்டணியில் சேர வருமாறு எல்லா கட்சிகளையும் அழைக்கிறார்.
 அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் மம்தா மீண்டும் முதல்வராக சத்தியப்பிரமாணம் எடுக்க முடியாது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 42 இடங்களில் பாஜக 18 இடங்களை வென்றது. 2019-ல் மம்தாவின் ஓட்டுக்கள் பாதியாக குறைந்தன. 2021ல் அது காணாமல் போய்விடும்.” என்று திலீப் கோஷ் தெரிவித்தார்.