Asianet News TamilAsianet News Tamil

ராஜராஜசோழன் சிலையை மீட்டது சரி! கடத்தியது யார்? திருட்டுக்கு காரணமானவர்கள் யார்? சீமான் சரமாரி கேள்வி...

Who kidnapped Rajaraja Chozhan? Who is responsible for theft? Seeman question
Who kidnapped Rajaraja Chozhan? Who is responsible for theft? Seeman question
Author
First Published Jun 15, 2018, 12:23 PM IST


தஞ்சாவூர்
 
"ராஜராஜசோழன் சிலையை மீட்டுக்கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. இதை கடத்தியது யார்? எப்போது திருட்டு போனது, இதற்கு காரணமானவர்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை" என்றும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

தஞ்சாவூரில் கடந்த 10–ஆம் தேதி இரவு காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய பேரியக்கத் தலைவருமான மணியரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த அவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மணியரசனை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்து ஆறுதல் கூறினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தன்னலமில்லாமல் நீண்ட காலமாக போராடி வருகிறார். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழிப்பறிக்காக என கூறுகிறார்கள். அவரிடம் பணம் இருக்காது என்று தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். பிறகு எப்படி வழிப்பறிக்காக நடந்தது என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்தத் தாக்குதலை ஏன் நடத்தினார்கள்? எதற்காக நடத்தினார்கள் என்ற கோணத்தில் விசாரணை கொண்டு செல்லப்படவில்லை. 

பொதுமக்கள் பிரச்சனைகளுக்காக போராடுபவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்கூட பயணிப்பவர்களுக்கும் இது அச்சத்தை ஏற்படுத்தும். போராடும் சிந்தனை வரக்கூடாது என அரசு நினைக்கிறது.

காவிரி பிரச்சனை தொடர்பாக சட்டப் போராட்டம் நடத்தி ஆணையம் அமைத்தும் இன்னும் கெஞ்சுகிறார்கள். அழுத்தம் கொடுப்பதில்லை. 

சென்னை – சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராகப் போராட்டத்தை தொடங்கியது நான் தான். நாங்கள் கேட்பது தண்ணீர். ஆனால், அவர்கள் தார்ச்சாலை கொடுக்கிறார்கள். சாலை போட்டால் வளர்ச்சி என்கிறார்கள். அது கவர்ச்சி வார்த்தை.

நிலத்தை பறித்து, மண்ணை அழித்து சாலை அமைத்து என்ன பயன்? யாருக்காக அந்த சாலை போடப்படுகிறது? தொழில் வளம் என்கிறார்கள். பலநூறு ஆண்டுகாலம் போராடி காட்டை விளைநிலமாக மாற்றி உள்ளனர். தற்போது அதனை அழித்து தொழிற்சாலை அமைத்தால் பருப்பு, விளை பொருட்களை உருவாக்க முடியுமா? துறைமுகம் என்கிறார்கள். அது எதற்கு?.

இங்குள்ள வளத்தை ஏற்றுமதி செய்து விட்டு அரிசி, பருப்பு, வெங்காயம் இறக்குமதி செய்வதால் என்ன பயன்? இதை பேசினால் சமூக விரோதி, தேசத்துரோகி என்கிறார்கள். 

தஞ்சை பெரியகோவிலில் இருந்து திருட்டு போன ராஜராஜசோழன் சிலையை மீட்டுக்கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. இதை கடத்தியது யார்? எப்போது திருட்டு போனது, இதற்கு காரணமானவர்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை" என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios