வரும் ஏப்ரல் , மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பது குறித்து இன்டியா டிவி-சிஎன்எக்ஸ் நிறுவனம் இணைந்து நாடு தழுவிய அளவில் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க 41 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக 23 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு 7 சதவீதம் பேர் மட்டும் ஆதரவு அளித்துள்ளனர்.

பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாருக்கு 5%, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு 3%, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 3% பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

மோடி ஆட்சியில் நல்ல காலம்பிறந்ததா என்ற கேள்விக்கு 46 சதவீதம் பேர், 'ஆம்' என்றும் 34 சதவீதம் பேர் 'இல்லை' என்றும் கருத்து தெரிவித்தனர். 20 சதவீதம் பேர் பதில் அளிக்கவில்லை.

ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாகவும் கருத்துக் கணிப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அவசர சட்டத்தைப் பிறப் பிக்க வேண்டும் என்று 40 சதவீத பேர் ஆதரவு தெரிவித்தனர்.