நிலைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், வார்டுகள் குழு தலைவர், ஒப்பந்தக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 30.03.2022 மற்றும் 31.03.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவியேற்றுக்கொண்டர். இதில் 99% இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவி இடங்களையும் திமுகவினரே கைப்பற்றியுள்ளனர். இதனால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் பதவி விலக வேண்டும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. இதையும் மீறி ஏராளமானோர் பதவி விலகாத நிலையில் தான் உள்ளனர்.

இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க தற்போது நிலைக்குழு தலைவர், வார்டு குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகிற 30 ஆம் தேதி 21 மாநகராட்சியில் உள்ள வார்டு குழு தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதியம் நிலைக்குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 31 ஆம் தேதி நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கான வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு, நியமனக் குழு உறுப்பினர்கள், மற்றும் ஒப்பந்தக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 31 ஆம் தேதி மதியம் 21 மாநகராட்சிக்கான நிலைக்குழு தலைவர்கள், கணக்குக்குழுத் தலைவர், பொது சுகாதார குழு தலைவர், கல்விக்குழு தலைவர், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர், நகரமைப்பு குழு தலைவர், மற்றும் பணிகள் குழு தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மறைமுக தேர்தல் சிசிடிவி பதிவு மற்றும் போலீஸ் பாதுகாப்போடு தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஏற்கனவே மேயர், துணை மேயர், நகராட்சி,மற்றும் பேரூராட்சி தலைவர் பதவியிடங்கள் கிடைக்காமல் திமுகவினர் உள்ள நிலையில் தற்போது மண்டலக்குழு,நிலைக்குழு தேர்தலானது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பதவியிடங்களையாவது பெற்று விட வேண்டும் என திமுக மூத்த நிர்வாகிகள் போட்டியிட்டு வருகின்றனர். ஏற்கனவே கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் உள்ள பிரச்சனை இன்னும் தீராத நிலையில் தற்போது மண்டலக்குழு உள்ளிட்ட பல்வேறு குழு தலைவர்கள் பதவி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சனை திமுக தலைமைக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை திமுக தலைமை தனது தொண்டர்களுக்கு பதவி பங்கீட்டு கொடுக்குமா? அல்லது கூட்டணி கட்சியினருக்கு வழங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
