17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது. என்றாலும் கடந்த 2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் அமைச்சரவையில்  சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாஜக  கூட்டணி அரசு அமைக்கிறது.

நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (பிரதமர்) தேர்ந்து எடுக்கப்பட்ட மோடிக்கு, புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்து உள்ளார். இன்று பதவி ஏற்கிறார் அதை ஏற்று மோடி இன்று (வியாழக்கிழமை) மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக் கிறார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆகிறார்.

பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள முற்றத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். 

மோடியுடன் அமைச்சர்களும்  பதவி ஏற்கிறார்கள். பாரதீய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள்.

மோடி அமைச்சரவையில், இடம் பெறும் புதிய அமைச்சர்கள் யார்? என்பது பற்றி அமித்ஷாவுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. எனினும், அமைச்சரவை இலாக்காக்கள்  ஒதுக்குவது பற்றி ஆலோசனை நடைபெற்று இருக்கலாம் எனத் தெரிகிறது. . 

அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை, தனது இல்லத்தில் தேநீர் விருந்து அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்களா ? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.