அதிமுக ஆட்சி தொடர டி.டி.வி.தினகரனும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றிணைய வேண்டும் என்பது அதிமுக எம்.எல்.ஏக்கள் பெரும்பாலனவர்களின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி முதல்வராக தினகரன் வழிவிடுவாரா என்பது சந்தேகமே...  

தமிழக சட்டப்பேரவையில்  மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர். சபாநாயகர் போக, மீதம் உள்ள இடங்கள் 233. இதில் பெரும்பான்மை பெற 117 இடங்கள் தேவை. தற்சமயம் காலியாக உள்ள 22 இடங்களில்,18 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. எஞ்சி உள்ள நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.அதிமுகவிடம் தற்போது113 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். திமுக வசம் 88 உறுப்பினர்களும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சியில் 8 உறுப்பினர்களும் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து திமுக கூட்டணியில் 97 உறுப்பினர்கள் உள்ளனர்.

சுயேட்சை உறுப்பினராக டி.டி.வி.தினகரன் உள்ளார். தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அவர்கள் மூவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 110 ஆக குறைந்துவிடும். 22 தொகுதிகளுகான தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியான பின்னர் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சபாநாயகர் நீங்கலாக 230 ஆக இருக்கும். 

அதில் அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே இந்த 22 தொகுதிகளில் குறைந்தது 6 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றால் தான் பெரும்பான்மையை தக்க வைக்க முடியும். திமுக 19 இடங்களில் வென்றால் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும். அதிமுக 6 இடங்களுக்கும் குறைவாகவும், திமுக 19 இடங்களுக்கு குறைவாகவும் வெற்றி பெற்று மீதம் உள்ள தொகுதிகளில் இதர கட்சிகள் வெற்றி பெற்றால் எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு சட்டப்பேரவை உருவாகும். ஒருவேளை டி.டி.வி.தினகரன் அணி வேட்பாளர்கள் சில தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை தீர்மானிக்கும் துருப்புச்சீட்டாக மாறுவார்.  

 

ஆனால், டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக இருந்த 18 எம்.எல்.ஏக்களையும் பதவி நீக்கம் செய்து, தற்போது மேலும் 3 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதால் முன்பை விட மேலும் எடப்பாடி மீது கோபத்தில் இருக்கிறார். இதனால் அவர் எடப்பாடிக்கு வழிவிட வாய்ப்பில்லை என்கிறார்கள். ஏற்கெனவே ஆட்சி அமைக்க எடப்பாடிக்கும், ஸ்டாலினுக்கும் ஆதரவு தரமாட்டேன் என திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தார் டி.டி.வி.தினகரன். 

ஒருவேளை 6 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்றால் டி.டி.வி.தினகரன் மட்டுமல்ல. பிறரது ஆதரவு அதிமுக ஆட்சிக்கு தேவையே இல்லை.