who is tamilnadu finance minister ops or jayakumar
தமிழகத்தின் நிதியமைச்சராக பெயரளவில் மட்டுமே பன்னீர்செல்வம் இருக்கிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, பன்னீர்செல்வத்தை நிதியமைச்சராக்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில் பன்னீர்செல்வம் நிதியமைச்சராக இருந்தார்.
அதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்தது. அப்போதும் நிதித்துறை பன்னீர்செல்வத்துக்கே ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமைந்த 4 மாதத்தில் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார்.
அன்றிரவே பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போதும் நிதித்துறை அவரிடமே இருந்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஜிஎஸ்டி வரிவிதிப்பை எதிர்த்தார். அதனால் ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அரசு கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சரான பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. ஆனால் நிதித்துறை சார்ந்த மற்ற கூட்டங்களில் கலந்துகொண்டார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாஃபா பாண்டியராஜன்:
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன் அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பிறகு நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாஃபா பாண்டியராஜன் தான் கலந்துகொண்டார். ஆனால் அப்போதைய நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தான். ஆனால் நிதியமைச்சரான பன்னீர்செல்வம், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார். அப்போதும் நிதித்துறை அவரிடம்தான் இருந்தது. அப்போது நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தான் கலந்துகொண்டார்.
பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிபோனது நிதித்துறை:
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி செயல்படத் தொடங்கியபோது, முதல்வர் பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது.
முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில், ஜெயக்குமாரிடம் நிதித்துறை வழங்கப்பட்டது. அதன்பிறகு நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
நிதித்துறையை மீண்டும் பெற்றார்:
பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் பழனிசாமி அணியுடன் பன்னீர்செல்வம் அணி இணைந்தவுடன், அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது ஜெயக்குமாரிடம் இருந்து நிதித்துறை மீண்டும் பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டது.
எனவே மீண்டும் நிதியமைச்சரானார் பன்னீர்செல்வம். நிதித்துறையை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் தான் வைத்துக்கொள்வேன் என கங்கனம் கட்டிக்கொண்டு பன்னீர்செல்வம் நிதித்துறையை பெற்றுவிடுகிறார்.
பன்னீர்செல்வமா? ஜெயக்குமாரா?
ஆனால் இன்று அசாம் மாநிலம் குவாஹத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். நிதியமைச்சராக உள்ள பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை.
நிதியமைச்சர் தான் கலந்துகொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. தமிழகத்தின் சார்பில் மாநில பிரதிநிதியாக ஒருவர் கலந்துகொள்ளலாம்.
ஆனால், என்ன பிரச்னை என்றால், நிதித்துறையை தன்வசமே வைத்துக்கொள்ளும் பன்னீர்செல்வம் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்வதே இல்லை. ஏதாவது ஒருமுறை கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகலாம். ஆனால் எப்போதுமே கலந்துகொள்ள முடியாத சூழல் இருக்காது அல்லவா? இதுவரையிலான அனைத்து கூட்டத்திற்குமே அமைச்சர் மாஃபா பாண்டியராஜனோ அமைச்சர் ஜெயக்குமாரோ தான் கலந்துகொள்கிறார்கள்.
அவர் துணை முதல்வர்.. அதனால் துறை சார்ந்த அனைத்து கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ள வேண்டியதில்லை என்ற கருத்து எழலாம். அவர் இப்போதுதான் துணை முதல்வர். அவர் நிதித்துறையை மட்டும் கவனித்துக்கொண்ட போதிலும் கூட ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
நிதித்துறையை யாருக்கும் விட்டுக்கொடுக்காத மனமில்லாத பன்னீர்செல்வம், அந்த துறை சார்ந்த விவகாரங்களை அவர் கவனிப்பதும் கையாள்வதும்தானே நியாயம். பெயரளவில் மட்டும் துறையை வைத்துக்கொண்டு, ஆனால் அதுதொடர்பான கூட்டங்களுக்கு மற்ற அமைச்சர்களை அனுப்பிவைப்பது நியாயமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.
அப்படியென்றால், நிதித்துறை சார்ந்த விவகாரங்களை கையாள்பவர்களிடம் அந்த துறையை வழங்கிவிடலாம் அல்லவா? என்ற கேள்வியும் கூட எழுகிறது.
ஒருவேளை ஜிஎஸ்டி தொடர்பான முழு விவரங்களும் தெரியாததால் கலந்துகொள்ளவில்லை என்றாலும்கூட.... அப்போதும்கூட தனக்கு தெரியாத விஷயம் சார்ந்த துறையை, தான் வைத்துக்கொள்வதைவிட தெரிந்தவர்களிடம் கொடுப்பதுதானே ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்க முடியும்? அதைவிடுத்து வீம்புக்கு நிதித்துறையை வைத்துக்கொள்வது சரிதானா? என்ற கேள்வியும் எழுவதில் ஆச்சரியமில்லை.
ஜிஎஸ்டி தொடர்பான கடந்த பல கூட்டங்களில் ஜெயக்குமார் கலந்துகொண்டதாலும், அதை அவர் பின் தொடர்ந்து வருவதாலும், அப்டேட்டுடன் இருப்பார் என்பதால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜெயக்குமாரே கலந்துகொண்டிருப்பார் என்றாலும்.. அப்படி அப்டேட்டுடன் இருப்பவரிடம்தானே அந்த துறையும் இருக்க வேண்டும்?
