ஆ. ராசாவை பொருளாளர் பதவிக்கு நியமிப்பதன் மூலம் தலித்துகள் மத்தியில் திமுகவின் செல்வாக்கை உயர்த்தலாம் என்றும் தலைமையிடம் கூறப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி இல்லாவிட்டால், கனிமொழியை நியமிப்பதன் மூலம், பெண்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை உயர்த்தலாம் என்று கட்சிக்குள் பலர் விரும்புவதாக தெரிகிறது. 

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வாகப் போவது உறுதியாகிவிட்ட நிலையில், பொருளாளர் பதவிக்கு ஆ.ராசா அல்லது கனிமொழியை முன்னிறுத்த வேண்டும் என்ற குரல் திமுகவில் எழுந்துள்ளதாக தெரிகிறது.
அண்ணாதுரை, நெடுஞ்செழியன், க. அன்பழகன் ஆகியோருக்குப் பிறகு திமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. பொதுச்செயலாளர் தேர்வில் போட்டியிட வசதியாக பொருளாளர் துரைமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ, அவரே பொதுச்செயலாளர் என்ற நிலை நீடித்துவரும் நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட துரைமுருகன் விரும்புவதால், பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளாதாக ஸ்டாலினே அறிவித்தார். இதன் மூலம் துரைமுருகன்தான் அடுத்த பொதுச்செயலாளர் என்பது உறுதியாகிவிட்டது. துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்வு செய்யப்படும் நிலையில், அவர் வகித்த வந்த பொருளாளர் பதவி யாருக்கு என்பதுதான் தற்போது திமுகவில் எழுந்துள்ள கேள்வி.


இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், “திமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதி. அவருடைய சீனியாரிட்டி போன்ற பல காரணங்களால் கட்சியில் உள்ள எல்லோருமே துரைமுருகன் பொதுச்செயலாளராவதை வரவேற்கிறார்கள். ஆனால், துரைமுருகன் வகித்த பொருளாளர் பதவி யாருக்கு போகும் என்பதுதான கேள்வி. ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி என இவர்களில் யாராவது ஒருவர் பொருளாளர் பதவிக்கு வர வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தன.


கொரோனா வைரஸ் பீதி காரணமாக திமுகவின் பொதுக்குழு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பொதுக்குழு கூடும்போது இந்த இரு பதவிகளும் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனிமொழிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சிக்குள் எழுந்துள்ளதால், திமுகவின் சீனியர்களைத் தாண்டி கட்சிக்குள் என்ன நடக்கப் போகிறது என்ற பரப்பரப்பான காட்சிகள் தற்போது திமுகவில் ஓடிக்கொண்டிருக்கிறது.