"ஆன்டி இந்தியன் புகழ்" எச். ராஜாவா ? தாமரை மலர்ந்தே தீரும் - தமிழிசையா..? மத்திய அமைச்சராவப்போவது யார்..? 
 
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, இன்று மாலை டெல்லியில் மீண்டும் இரண்டாவது முறையாக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி.

தமிழகத்தில் பாஜக, அதிமுக உடன் கூட்டணி வைத்து  நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை மூச்சுக்கு மூச்சு சொல்லி, கட்சிக்காக தீயாய் வேலை செய்தாங்க... ஆரம்பம் முதலே கட்சிக்காக மழை வெயில் என்று பாராமல் உழைத்த தமிழிசை, தமிழக பாஜக தலைவராக நீடித்து வருகிறார். இவர் ஒரு பக்கம் இருக்க.. வாயை திறந்தாலே சர்ச்சை பேச்சு தான் என பேசப்படும் எச். ராஜா இன்னொரு பக்கம் கட்சிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எச்.ராஜா தோல்வியுற்றாலும் அவருக்கு அமைச்சரவை பதவி கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. 

இது குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்த தமிழிசை, யாரெல்லாம் அமைச்சரவையில்இடம் பெறுவார்கள் என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தான் முடிவு செய்வார் என தெரிவித்து உள்ளார். இதற்கிடையில் அதிமுக சார்பாக போட்டியிட்ட துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தேனீ தொகுதியில் வென்றார்.  

தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் ஒரே ஒரு எம்பி சீட் இருந்தாலும், ரவீந்திர நாத்திற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை பிரதமர் பதவியேற்பு விழா நடைபெறும் தருணத்தில், 
அமைச்சரவை குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனராம் அமித்ஷா மற்றும் மோடி. இதன் மூலம் தமிழகத்திலிருந்து யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.