முதியவர்கள், குழந்தைகள் மட்டுமல்ல, இளம் வயதினரையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கிவருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் ஆட்டம் கண்டுள்ளன. இந்தியா உள்பட பிற நாடுகளிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது. இதனால், பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோரையே பெரிதும் தாக்குவதாகவும் இளம் வயதினரை எளிதாக  தாக்குவதில்லை என்றும் பேசப்பட்டுவருகிறது. ஆனால், இந்தப் பேச்சில் எந்த உண்மையும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதானம் கேபிரியசஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய சவாலை உண்டாக்குகிறது. அந்த சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கொரோனாவால் பரப்படும் வதந்திகளை எதிர்கொள்வதும் மிகப்பெரிய சவால்தான். 60 வயதுக்கு மேற்பட்டவர்களே இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று பேச்சு பல நாடுகளில் உள்ளது. ஆனால், மருத்துவமனைகளில் 50 வயதுக்கும் குறைவானவர்களே அதிகளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


கொரோனாவிலிருந்து இளைஞர்கள் எல்லோரும் தப்பிக்க முடியாதவர்கள் அல்ல. இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், வாரக்கணக்கில் மருத்துவமனையில் முடங்கும் நிலை ஏற்படும். உயிரிழப்பையும் ஏற்படுத்தும். இளைஞர்கள் செல்லும் இடங்களைப் பொறுத்து நோய்த் தாக்கக்கூடும். எனவே ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு எந்தப் பரவலும் ஏற்படாத வகையில் சமூக தள்ளிவைப்பு முறையைப் பின்பற்ற வேண்டும்” என டெட்ராஸ் அதானம் கேபிரியசஸ் தெரிவித்துள்ளார்.