கவுரி லங்கேஷை கொலை செய்த இயக்கம் மீது தடை எங்கே..? முதலில் NIA-வை தடை செய்யுங்க.. கொதிக்கும் ஜாவாஹிருல்லா.
அரசியல் அமைப்புகளுக்குத் தடை விதிப்பது ஜனநாயகத்தின் குரல் வளை நெறிக்கும் செயல் என்றும், மாநில உரிமைகளை பறிக்கும் தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
அரசியல் அமைப்புகளுக்குத் தடை விதிப்பது ஜனநாயகத்தின் குரல் வளை நெறிக்கும் செயல் என்றும், மாநில உரிமைகளை பறிக்கும் தேசிய புலனாய்வு முகமையை கலைக்க வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
நமது நாடு ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் இந்த நாட்டு மக்கள் அமைப்புகள் கட்டமைத்து நடத்தவும் அதன் வழியாக தங்கள் கொள்கைகளை பரப்பவும் மக்கள் தொண்டாற்றவும் அனுமதி அளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் இந்த அடிப்படைக்கு முரணாக ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் நடவடிக்கையே அமைப்புகள் மீது விதிக்கப்படும் தடை.
ஒன்றியத்தில் திரு. நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் தங்கள் மக்கள் விரோத கொள்கைக்கு விரோதமாக செயல்படும் அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை முடக்கும் திட்டத்துடன் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நோக்கத்துடன் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு (உபா) சட்டத்தையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்க துறை ஆகிய அமைப்புகளையும் ஓன்றிய பாஜக அரசு பயன்படுத்தி வருகின்றது.
இதையும் படியுங்கள்: திமுகவின் பல்டிகளும் துதிப் பாடல்களும் என்னென்ன.? லிஸ்ட் போட்டு 'முரசொலி'யை ரவுண்டு கட்டிய பாஜக.!
இந்த அடிப்படையில் சிறுபான்மையினர் நலன் காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த அமைப்புகள் மீது உபா சட்டத்தின் கீழ் தடை விதிப்பது வரம்பு மீறிய ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். ஓர் அமைப்பின் உறுப்பினர்களில் சிலர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பாக ஒவ்வொரு குற்ற நிகழ்வில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் வலிமையான சட்டங்கள் உள்ளன.
ஒட்டுமொத்தமாக முழு அமைப்பையும் தடை செய்வது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். வெளிப்படையாகத் தங்கள் கொள்கைக்கு விரோதமானவர்கள் என்று கருதி பேராசிரியர் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர். எம்.எம்.கல்புர்க்கி. கவுரி லங்கேஷ் ஆகியோரை படுகொலை செய்த ஒரு பயங்கரவாத அமைப்பின் மீது எவ்விதத் தடையும் இல்லை.
இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமான ஒரு குறிப்பிட்ட மதவாத ஆட்சியை அமைப்போம் என்று அறிவித்து விட்டு அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான முன்வடிவை வெளியிட்டு நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் பகிரங்கமாக ஈடுபடுவோர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்த அமைப்பினர் நாட்டின் அச்சுறுத்தலாக ஒன்றிய அரசுக்கு தோன்றவில்லை என்பது வேதனைக்குரியது. இந்தச் சூழலில் பிரபலமாக இயங்கும் அமைப்புகளை அராஜகமாகத் தடை செய்வது ஒன்றிய அரசின் வஞ்சக எண்ணத்தையும் பழிவாங்கும் மனப்பான்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: PFIக்கு தடை எதிர்பார்த்த ஒன்று தான்...! - ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்பிற்கு தடை எப்போது..? திருமாவளவன்
பிஎப்ஐ அமைப்பின் செயற்பாடுகளில் எங்களுக்கு ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.இருப்பினும் அந்த அமைப்பையும் அது சார்ந்த துணை அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடை ஏற்புடையது அல்ல.இந்தத் தடைகள் திரும்பப் பெறப்படவேண்டும். ஜனநாயக விரோத உபா சட்டம் ரத்து செய்யப்படவேண்டும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் என்ஐஏ அமைப்பு கலைக்கப்பட வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.