PFIக்கு தடை எதிர்பார்த்த ஒன்று தான்...! - ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள் அமைப்பிற்கு தடை எப்போது..? திருமாவளவன்
ஆயுதப் பயிற்சி, குண்டு வெடிப்பு, கும்பல் கொலைகள், ஆணவக் கொலைகள் போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள், சனாதன் சன்ஸாத், ராம்சேனா, அனுமன் சேனா, சங்கராச்சாரியா பரிஷத், ரன்வீர் சேனா போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டாமா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஎப்ஐ இயக்கத்திற்கு தடை
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்களை மத்இய அரசு கூறியது. இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 8 மாநிலங்களில் 110 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. இதனிடையே நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் பிஎப்ஐ மற்றும் அதற்கு தொடர்புடைய அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பாஜகவின் செயல்திட்டத்தில் ஒன்று
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிஎப்ஐ இயக்கத்தை பாஜக அரசு ஐந்தாண்டுகளுக்குத் தடை செய்துள்ளது. இது எதிர்பார்த்த ஒன்று தான். ஏற்கனவே வரையறுக்கப்பட்ட செயல்திட்டங்களை ஒவ்வொன்றாக சங்பரிவார் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அவற்றில் இதுவும் ஒன்று. பாபர் மசூதியை இடித்துவிட்டு அதே இடத்தில் இராமர் கோவில் கட்டுவது; தொடங்கி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புத் தகுதியை நீக்குவது; முத்தலாக் சட்டத்தை ரத்துசெய்வது; குடியுரிமை சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களை ஓரங்கட்டுவது;பசுப்புனிதம்- லவ்ஜிகாத்-மதமாற்றம் என்னும் பெயரில் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பை வலுப்படுத்துவது;
ஆர்.எஸ்.எஸ்க்கு தடை எப்போது..?
இஸ்லாமியத் தீவிரவாதம் என்னும் பெயரில் இஸ்லாமிய அமைப்புகளை அச்சுறுத்துவது என இன்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்வது வரை அவர்களின் முன்முடிவு திட்டங்களைச் செயற் படுத்துகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு யாருக்கு இருந்தாலும் அது வன்மையான கண்டனத்துக்குரியது தான். ஆனால், ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தள், சனாதன் சன்ஸாத், ராம்சேனா, அனுமன் சேனா, சங்கராச்சாரியா பரிஷத், ரன்வீர் சேனா போன்ற அமைப்புகளுக்கு இது பொருந்தாதா? ஆயுதப் பயிற்சி, குண்டு வெடிப்பு, கும்பல் கொலைகள், ஆணவக் கொலைகள் போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் இவற்றைத் தடை செய்ய வேண்டாமா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்
சமூக நலன் கொண்ட அமைப்பு PFI.. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தகுதி இருக்கா? கொந்தளித்த வைகோ