சன் டிவி செய்தி ஆசிரியர் நீக்கப்பட்டபோது எங்கே போனார் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் வேலுமணி  கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’சென்னை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை எவ்வளவு தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுக்கிறேன் என்பதை மக்களும், அனைத்து ஊடகங்களும் அறிவார்கள். என்னை பற்றிய எந்த பொய் செய்திகளுக்கும் எள்ளளவும் நான் கவலைப்படவில்லை.

பேரிடர் காலத்தில் விஷமத்தனமாக பொதுமக்களை அரசு நிர்வாகம் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு எதிராக திருப்ப முயற்சியாக ஆதாரமற்ற செய்திகளைப் பரப்பும் நோக்கில் செயல்பட்டு வந்த ஒரு வலை தளம் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தது. அவதூறான விஷம செய்திகள் குறித்து மாநகராட்சி அரசு ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை அந்த வலைதள உரிமையாளர்கள் மீது பேரிடர் கால சட்ட விதி முறைப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வலைதளத்தை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்வையிட்டபோது அரசாங்கத்திற்காக உழைத்திடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களை அரசாங்கத்திற்கு எதிராக தூண்டிவிட்டு வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட வைப்பது போன்ற விஷமத்தனமான பொய்யான செய்திகளை குறிப்பிட்டிருந்தால் இக்கட்டான இந்தச் சூழலில் பொதுமக்கள் பாதிப்பு உள்ளவர்கள் என்று மாநகராட்சி அரசு ஊழியர் ஒருவர் அந்த வலை தளத்தின் உரிமையாளர் மீது புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனக்கும், இந்த புகாருக்கும் சம்பந்தம் இல்லாத நிலையில் அப்படி ஒரு வலைதளம் இருப்பது கூட எனக்குத் தெரியாத நிலையில், அரசியலாக்கி என்னோடு இந்த நிகழ்வை தொடர்புபடுத்தி திரு ஸ்டாலின் அவதூறு பரப்புவதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். அரசு ஊழியர் ஒருவரின் புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள சம்மந்தப்பட்ட வலைதள உரிமையாளர்கள் கருத்து சுதந்திரம் என்று குரல் கொடுக்கும் திரு.ஸ்டாலின் அவரை பற்றிய ஒரு கருத்து சித்திரத்தை ஒளிபரப்பி அதற்காக ஒரே நாளில் பல வருடங்கள் பணி செய்த மூத்த செய்தி ஆசிரியர் உள்ளிட்டவர்களை இந்த இக்கட்டான தருணத்தில் அவருக்கு நெருக்கமான ஊடக நிறுவனம் அண்மையில் சர்வாதிகாரப் போக்குடன் நீக்கிய போது அது அவர்களது கருத்து சுதந்திரம் என்று குரல் கொடுத்தாரா?

இல்லையேல் ஒட்டுமொத்த தமிழ் ஊடகங்களை அவரது கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் நாக்கூசும் விதமாக அறுவருப்பாக விமர்சித்த போது பொங்கி எழுந்தாரா? ஒட்டுமொத்த தமிழகமே விலகியிரு... என்று விழிப்புணர்வு செய்து கொண்டிருக்கும்போது ’ஒன்றிணைவோம் வா’ என்கிற தன்னுடைய வெற்று விளம்பரத்தின் படப்பிடிப்பு காட்சிகளுக்காக தொகுதியில் நிவாரணம் பெறுவது போல நடித்துக் கொண்டிருப்பது யார்? என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.