சினிமாவில் கூட கமலும், ரஜினியும் இப்படி மோதிக் கொண்டதில்லை. ரஜினிக்கு ஒரு ‘பிரியா’ ஹிட்டடித்தால், கமலுக்கு ’குரு’ ஹிட்டடிக்கும். ரஜினிக்கு ‘பில்லா’ மெகா ஹிட்டானால், கமலுக்கு ‘வாழ்வே மாயம்’ பிளாக் பஸ்டராகும்.

லட்சம் வெற்றியை பார்த்த இவர்கள் இருவரும் பல ரூறு தோல்விகளையும் கண்டிருக்கிறார்கள். இரண்டையும் இருவரும் சமமாக பாவித்தபடி ‘நண்பனே! எனது உயிர் நண்பனே!’ என்றபடிதான் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

பல கோடிகள் சம்பந்தப்பட்ட பிஸ்னஸ் என்றாலும் எந்த பொறாமையும் தீண்டாத இவர்களின் அப்ரோச்மெண்டை இந்திய திரையுலகமே ஆச்சரியமாகத்தான் பார்த்தது. ஆனால் திரையுலகிலிருந்து ரிட்டயர்டு ஆகும் நிலையில், திடீரென அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் இருவருக்குள்ளும் மூண்டிருக்கும் சத்தமில்லாத யுத்தம்தான் இப்போது தமிழக அரசியலின் ஹாட்டஸ்ட் டாபிக்.

அரசியலுக்கு வரும் ஆசை கமலுக்கு பெரிதாய் இருக்கவில்லை. ஆனால் ரஜினி அதை நோக்கி முன்னேறுகிறார் என்பது உறுதியாய் தெரிந்ததும் தானும் சட்டென்று அரசியலை கையிலெடுத்தார்.

கடந்த டிசம்பர் இறுதியில் ரஜினிகாந்த் ‘நான் நிச்சயம் அரசியலுக்கு வருகிறேன். அடுத்த சட்டமன்ற தேர்தலை  என் கட்சி சந்திக்கும்.’ என்று அறிவித்தார். தேசம் முழுக்க ரஜினி பரபரப்பு தொற்றிக் கொண்டது. தலைவா! தலைவா! என்று ஆளாளுக்கு கொண்டாடினர்.

இந்த நிலையில் ஸ்பாட் லைட்டை சட்டென்று தன் பக்கம் திருப்பிய கமல்ஹாசன் மளமளவென கட்சி துவக்கும் பணியிலிறங்கினார். எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கின்ற சினிமா ஷூட்டிங்குக்கே ஒத்திகை பார்த்துவிட்டு தயாராய் செல்வதுதான் கமலின் ஸ்டைல்.

அப்படிப்பட்டவர் கரணம் தப்பினால் மரணம் எனும் யதார்த்த அரசியலுக்கு எந்த முன்னேற்பாடும் இல்லாமல் நுழைந்தது, ‘ரஜினிக்கு செக் வைக்கும் முயற்சியோ!’ என்று விமர்சகர்களால் பார்க்கப்பட்டது.

என்னதான் ரஜினியிடம் வாழ்த்து வாங்கிவிட்டு வந்து கட்சியை துவக்கினாலும் கூட கமல் மிக முழுமையாக ரஜினியின் அரசியலுக்கு எதிரானவராகவே பார்க்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேருரையாற்றிய ரஜினி “தமிழக அரசியலில் நல்ல தலைமை, நல்ல தலைவர் இல்லாமல் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பவே நான் வருகிறேன்.” என்று முழங்கினார். இது பெரும் அரசியல் கொதிப்பை உருவாக்கி இருக்கிறது. ‘எம்.ஜி.ஆர். போன்று நல்லாட்சி தருவேன்!’ என்று அவர் சொன்ன விஷயமும் மிகப் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இதை பிரேக் செய்யும் விதமாகவும், வெளிச்சத்தை தனது பக்கம் திருப்பும் முகமாகவும் தனது இல்லத்தில் கொடியேற்றல் நிகழ்ச்சியை வைத்திருப்பதுடன், பெரியார் சிலை விவகாரத்தில் ஸ்டாலின் மற்றும் வைகோ போன்றோருக்கு அறிவுரை சொல்வது போல் பேசி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் கமல்.

இதை கையிலெடுத்துப் பேசும் விமர்சகர்கள், ‘உன்னிப்பாக கவனித்தால் ஒரு விஷயம் புலனாகும். அதாவது எப்போதெல்லாம் ரஜினி லைம்லைட்டுக்குள் வருகிறாரோ அப்போதெல்லாம் கமல் ஏதோ ஒன்றை செய்து முழு பரபரப்பையுமோ அல்லது பாதி பரபரப்பையாவது தனது பக்கம் திருப்பிக் கொள்கிறார். அவரின் பின்னணியில் யாராவது இருந்து இயக்குகிறார்களா?

அல்லது...இந்த மண்ணின் மைந்தனான தான், சினிமாவில் ரஜினியை முந்தி முதல் இடத்தை பிடிக்கமுடியாமல் போய்விட்டது. ஆனால் அரசியலில் அப்படி இழந்துவிட கூடாது! எனும் ஈகோவினால் இப்படி செயல்படுகிறாரா என தெரியவில்லை. தான் ரஜினிக்கு செக் வைப்பது வெளியே தெரியாதபடி மிக நாசூக்காக அதே நேரம் வலுவான செக் வைத்து, அதை ரசிக்கவும் செய்கிறார்! என்கிறார்கள்.

இதற்கு நிச்சயம் வெகுவாக பதிலடியை கொடுத்தே தீருவார் ரஜினி.

ஆக இந்த ஈகோ யுத்தம் எங்கு முடிகிறதென பார்ப்போம்!