தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கரூரில் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டது. அதன்படியே நடப்பாண்டிலும் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும். அதுவும் இரண்டு தவணைகளாக அந்தக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் நிலை பற்றி ஆய்வுகள் செய்யப்படுகின்றன. ஆய்வுக்கு பிறகு அப்பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்.
தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா என ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. பள்ளிகளைத் தயார் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் முழுமையான தளர்வுகள் அளித்த பிறகு பள்ளிகள் தொடங்க உத்தரவிட்டால் அதற்கும் தயார் நிலையில் இருக்கிறோம். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.