இந்தியாவிலேயே கோவிட்19 பரிசோதனையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து, மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழ்நாட்டில் தேவையான தளர்வுகளுடன் ஊரடங்கு அமலாகி உள்ளது. பொது முடக்கத்தை கவனத்துடனும் பாதுகாப்புடனும்  அமல்படுத்தியுள்ளோம். இந்தியாவிலேயே கோவிட்19 பரிசோதனையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அதிகம் உள்ளன. தமிழகத்தில் இதுவரை 71 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும், கொரோனா சிகிச்சைக்கு இதுவரை ரூ.1,983 கோடி செலவிட்டுள்ளது, பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அளிக்க ரூ.5,340 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. 

குறிப்பாக தமிழகத்தில் 10, 11, 12 வகுப்பு மாணவர்கள் அக்டோபர்1ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தியபின் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். மாணவர்கள் பெற்றோர் நலன்கருதி பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். கொரோனா தடுப்பு பணிகளை ஆட்சியர்கள் தீவிரமாக கண்காணிக்க முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.